"ஏ வேலு ..!!! வண்டில ஏத்துன சிமெண்ட் மூட்டையலாம் இந்த விலாசத்தில போய் இறக்கிட்டு வந்துடு" என்று விலாசம் எழுதிய தாளை சுப்பிரமணி வேலுவிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்...
அந்த விலாசத்தை பிரித்து பார்த்ததும் அது தன் வீட்டருகே உள்ள விலாசம் என்று தெரிந்ததும் தன்னுடைய மீன்பாடி வண்டியை தள்ளிக்கொண்டு கொஞ்சம் உற்சாகத்துடன் சிமெண்ட் கம்பெனில இருந்து புறப்பட்டான்.
தான் போகும் வழியில் தான் தன்னுடைய மகள் செல்வி படிக்கும் பள்ளி இருப்பதாலும் அதே நேரத்தில் பள்ளி விடும் நேரம் நெருங்கி விட்டதாலும் அவளையும் தன்னுடன் வீட்டுக்கு அழைத்து போகலாம் என்று முடிவு செய்து பள்ளிக்கு சென்று அங்கே வெளியே காத்துக் கொண்டிருந்தான்.
வேலு மகள் செல்வி அங்கே இருக்கும் மாநகராட்சி பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அவளை சேர்த்த முதல் மாதம் மட்டும் அவளை பள்ளிக்கு விட்டு அழைத்து வந்தார்கள். அதன் பின் அவள் வீட்டருகே அருகே பள்ளிக்கு போகும் மாணவர்களோடு போய் வர பழகிக் கொண்டாள்..
அப்போது ஓரமாய் இருந்த வேலு "அம்மா செல்வி .... அம்மா செல்வி " என்று கூப்பிட்டான்.
செல்வி திரும்பி பார்த்ததும் தன் தந்தை அங்கே நின்று கொண்டிருப்பது தெரிந்ததும் "அப்பா" என மகிழ்ச்சியில் கத்திக்கொண்டே தாவி குதித்து ஓடி வந்து வேலுவின் கழுத்தை இறுக கட்டிக்கொண்டாள்.
தன் மகளை சிமெண்ட் மூட்டையில் மீது ஒரு துணியை போட்டு அதன் மீது அமரவைத்தான். "அம்மு குட்டி போலாமா " என்று செல்லமாய் கேட்டான்.
"போலாம் பா " என்று என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்...
பள்ளியில் விளையாடிய விளையாட்டை தன் தந்தையிடம் விவரித்துக்கொண்டே வந்தாள் . வேலுவும் ஒ அப்படியா..!!! அப்புறம் நடந்தது யாரு ஜெயிச்சீங்க என்று தன் மகளிடம் சந்தோசத்தோடு பேசிக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.
அப்போது ஒரு மேம்பாலம் குறுக்கிட்டது.
அவர்கள் வீட்டுக்கு சென்றடைய அந்த மேம்பாலத்தை அவர்கள் கடந்தாக வேண்டும். அவன் வண்டியிலிருந்து இறங்கி அந்த வண்டியை மேம்பாலத்தில் தள்ளிக்கொண்டு ஏற்றினான்.
மேம்பாலம் கொஞ்சம் உயரமாக இருந்ததால் வேலு மிகவும் கஷ்டப்பட்டு வண்டியை இழுத்துக்கொண்டு ஏற்றிக்கொண்டிருந்தான்.
இவ்வளவு நேரம் பேசிக்கொண்டே வந்த தந்தை திடிரென்று பேசாமல் இருந்ததை பார்த்து அவரை உற்று நோக்கினாள் செல்வி. வேலு முகம் முழுவதும் வியர்வையால் நனைந்து கொண்டிருந்தது. மூச்சியும் அதிகமாய் வாங்கி கொண்டிருந்தது.
இதை பார்த்த செல்விக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏதோ ஒன்று நினைத்தவளாய் திடிரென்று எழுந்து தன்னுடைய புத்தகப்பையை தலை மேல் வைத்துக்கொண்டு ஒற்றைக்காலில் நின்றாள்.
இதை பார்த்த வேலுக்கு ஒன்றுமே புரியவில்லை. வண்டியுடைய பிரேக்கை பிடித்துக்கொண்டு "என்னமா ஆச்சு?" என்று பதறியபடி கேட்டான்.
அதற்க்கு செல்வி "ஒன்னும் இல்லபா ஏற்கனவே வண்டி ரொம்ப பாரமா இருக்கு. அது பத்தமா நானும் என்னுடைய பையும் பாரமா இருக்கும்ல. அதான் பையை தூக்கி என் தலைமேல வச்சிகினா உங்களுக்கு எடை கம்மியா இருக்கும் அது போல ஒத்த கால்ல நின்னா பாதி எடை கொரைஞ்சிடும்ல. அப்புறம் நீங்க சுலபமாய் வண்டியை தள்ளலாம்ல" அப்பாவியாய் தன் மழலை குரலில் வேலுவிடம் சொன்னாள் ...
இதைகேட்ட வேலுவுக்கு மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் லேசாக வந்தது.
அதை துடைத்து கொண்டே "அப்படியா சொல்ற அப்போ நீ சொல்றது சரியாதான் இருக்கும். ஆனா நீ ஒத்த காலில் நிற்க வேணாம், நீ உட்கார்ந்து கொண்டே பையை மடிமேல வச்சிக்கோ! அப்பவும் நீதானே எடையை தூக்கினு இருக்க.. அப்படி செஞ்சா வண்டி தானா கஷ்டப்படாம போய்டும் " என்று மகளிடம் சொன்னான்.
அவளும் அதை ஆமோதித்து வேலு சொல் படியே நடந்தாள்.
தன் மகளுக்கு தான் கஷ்டப்படுவது தெரிய கூடாது என்று "அப்புறம் உங்க விளையாட்டுல என்னமா நடந்தது ? யாரு ஜெயித்தது என்று அப்பாகிட்ட சொல்லவே இல்லையே " என்று கேட்டான்.
"ஓ சொல்லலையா சரி சரி சொல்றேன் " என்று தான் விளையாடிய விளையாட்டை தொடர்ந்து விவரிக்க ஆரம்பித்து விட்டாள் செல்வி.
மறுபடியும் அப்பாவும் மகளும் ஜாலியாய் பேசிக்கொண்டே தன் வேதனையை வேலு முகத்தில் மட்டும் காட்டாமல் அந்த மேம்பாலத்தை மெதுவாய் ஏறி முடித்தான்...

No comments:
Post a Comment