"டேய் ஜோசப் எங்கடா இருக்க. தலைவர் படத்துக்கு டிக்கெட் கடைச்சிடிச்சி. இன்னும் 15 நிமிஷத்துல தலைவர் படம் போட்டுடவானுக சீக்கிரம் வந்து தொலைடா.." என்று நண்பர்கள் மொபைலில் கத்திக்கொண்டிருந்தார்கள்.
"ஹே கலக்கல் மச்சி... தோ தோ வந்துட்டேன் டா... இன்னும் 10 நிமிசத்துல வந்துடுவேன்" என்று சந்தோசம் பொங்க சொல்லிவிட்டு பைக் எடுத்துக்கொண்டு வேகமாய் கலம்பினான்...
"அண்ணா லிப்ட்னா அண்ணா லிப்ட்னா" என்று கை காட்டி வரும் எல்லாம் பைக்கிடமும் மணியும் முத்து என்ற இரு சிறுவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
(மணிக்கு 4வயதும் முத்துவுக்கு 6 வயதும் ஆகின்றது. அவர்கள் இருவரும் பள்ளி முடிந்து வீட்டுக்கு போக லிப்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.)
இதை அந்த வழியாக வந்த ஜோசப் பார்த்தான்.
அவனிடமும் அந்த சிறுவர்கள் லிப்டு கேட்டார்கள்.
ஏதோ ஒரு நினைப்பில் வண்டிய நிறுத்தி விட்டான்.
"அண்ணே அந்த சிக்னல் முனைல இறக்கி விட்டுடுறீங்களா?" என்று முத்து கேட்டான்.
ஜோசப் அவசரமாய் போகமாய் வேண்டும். இன்னும் 10 நிமிசத்துல தலைவர் படம். இருந்தாலும் "போற வழிதானே இறக்கி விட்டுடுவோம்" என்று நினைத்து அவனும் அவர்களுக்கு லிப்டு கொடுக்க சம்மதித்தான்.
அந்த இரண்டு சிறுவர்களும் உடனே பைக்கில சந்தோசத்தோடு ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். மணி முன்னாடியும் முத்து கடைசிலயும் உட்கார்ந்துகொண்டனர்...
பைக் அங்கிருந்து புறப்பட்டது.
அந்த சிக்னலை அடைய சில நிமிடம் இருக்கும்போது தான் முத்துவுக்கு தோன்றியது "அண்ணா நீங்க எந்த பக்கம் போறீங்க" என்று கேட்டான்.
ஜோசப் "வலது புறம்" என்றான்.
"அண்ணா நாங்களும் அந்த பக்கமாதான் போறோம்" என்றான்.
ஜோசப் சிரித்துக்கொண்டே "சரி போகலாம்" என்றான்.
"பார்த்தியாடா அம்மா சொன்ன போலவே நடக்குது" என்று சந்தோஷத்தோடு சொன்னான் முத்து.
"என்னடா அண்ணா சொன்னாங்க" என்று மணி கேட்டான்.
"அதாண்டா கடவுள் நமக்கு உதவி செய்யணும்னு நெனைச்சா சரியான ஆள காட்டுவாருனு. அந்த ஆள் இவர்தான் டா. பார்த்தியா நாம போற வழியிலேயே அவரும் வரார்". என்று முத்து சொன்னான்.
"ஆமாம்ல" என்று சொல்லிக்கொண்டே மணி வாயை பிளந்தான்.
"பிரேயர் பண்ணா இன்னும் நல்லது நடக்கும்னு சொன்னாங்களே டா. ஞாபகம் இருக்கா" என்று முத்து மணியிடம் கேட்டான்.
"இருக்கு டா அண்ணா" என்றான்.
"சரி இவர் நம்ம தெருவரை போகனும்னு பிரேயர் பண்ணலாமா" என்றான் முத்து.
"சரி சரி பண்ணுவோம்டா" என்று மணி சொன்னான்.
இருவரும் கை கூப்பி பிரார்த்தனை பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
"சாமி சாமி இவர் எங்க வீட்டு வரை போகனும் அதற்கு நீ தான் உதவி செய்யனும். ஏன்னா பஸ்ஸுலாம் ஒரே கூட்டமாய் போகுது. அதில் ஏற கூட முடியல. அதுக்குதான் வேண்டுறோம்" என்று லேசாய் முனுமுனுத்துக்கொண்டே முத்து வேண்டினான்.
அதற்க்கு முன்னாடி உட்கார்ந்து கொண்டிருந்த மணி "ஆமாம் சாமி.. ஆமாம் சாமி" என்று முத்துவின் பிரார்த்தனைக்கு உதவி புரிந்து கொண்டிருந்தான்..
ஜோசப்பின் மனம் மாறிக்கொண்டிருந்தது. நண்பர்களிடமிருந்து மறுபடியும் போன் வந்தது. ஆனால் ஜோசப்புக்கு அதை எடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. அந்த சிறுவர்களின் செயல்களை காதில் கேட்டபடி ரசித்துக்கொண்டிருந்தான். அவனுடைய சிறு வயது ஞாபகம் அனைத்தும் அவனுக்கு நினைவுக்கு வந்தது.
அந்த இரண்டு பேரும் எந்த இடத்திற்கு போக வேண்டுமென்பதை அவர்கள் பேசிய பேச்சில் இருந்து கணித்துவிட்டான் ஜோசப்.
ஜோசப் இடது பக்கமாய் திரும்பியதும் தியேட்டர் உள்ளது. என்ன செய்வதென்று யோசித்தான். இந்த பசங்களையும் அவனுக்கு ஏமாத்த மனசு வரல.
ரொம்ப யோசனைக்கு பிறகு ஜோசப் அந்த வேண்டுதலை கேட்டும் கேட்காதது போல " தம்பி டேய் நான் ரைட்ல போ போறேன் நீங்க இறங்க போறீங்களா வறீங்களா" என்றான்.
"நாங்களும் அந்த வழியா தானா போறோம்" என்று சந்தோஷத்தோடு சொன்னான் முத்து. மணியும் முத்துவும் ஒருவர் முகத்தை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியோடு தலையாட்டிக்கொண்டார்கள்.
அவர்களுடைய இடம் வந்ததும் "அண்ணே இங்க தானே இறங்கனும் நிறுத்துங்கனே" என்று சொல்லி வண்டியை நிறுத்தி இறங்கி விட்டு சந்தோஷ கூக்குரல் எழுப்பினார்கள். "ஹே பார்த்தியா டா அம்மா சொன்ன போலவே நடந்திச்சி. கடவுள் நமக்கு உதவி செஞ்சார் பார்த்தல." என்று முத்து கத்தினான்.
"ஆமாம் டா அண்ணா... வா இத ஓடிப் போய் அம்மா கிட்ட சொல்லலாம்.. நான்தான் முதல்ல சொல்லுவேன்." என்று சொன்னான் மணி.
"இல்ல நான் தான் சொல்லுவேன்" என்று முத்து சொன்னான்.
இருவரும் அப்படியே கத்திக்கொண்டே வீட்டை நோக்கி ஒடினார்கள்.
அவர்கள் அளவுக்கு அதிகமாய் சந்தோஷத்தில் இருந்ததால் அந்த இரண்டு சிறுவர்களுக்கும் ஜோசப்புக்கு ஒரு வார்த்தை நன்றி சொல்லத் தோணவில்லை..
அவனும் அதை எதிர் பார்ப்பதைப்போல் தெரியவில்லை.
அவர்கள் ஓடும் அழகை கொஞ்சம் நேரம் ரசித்து விட்டு அழகிய நினைவுகளோடும் மெல்லிய புன்னகையோடு அங்கிருந்து கலம்பினான்...