Monday, 8 August 2016

பலூன் வியாபாரி (குறுங்கதை)

"பலூன் எவ்வளவு பா?" என்று கணேசன் கேட்டான்.

"20 ரூபா சார்" என்றான் பலூன் வியாபாரி.

"என்ன பா இது அநியாயமா இருக்கே. 10 ரூபாக்கு கொடுப்பா" என்றான் கணேசன்.



"சார் இது எங்களுக்கே 15 ரூபாய்க்கு தான் சார் கிடைக்குது. இதுல நீங்க 10 ரூபாய்க்கு கேட்ட எப்படி சார் கொடுக்கறது" என்று பலூன் வியாபாரி சோகம் நிறைந்த குரலில்  கேட்டான்.

"சரி அப்போ 17 ரூபாய்க்கு கொடு" என்று விடாப்பிடியாய் கேட்டான் கணேசன்.

வேறு வழியின்றி 17 ரூபாய்க்கு ஒத்துக்கொண்டான்.

17ரூபாய் கொடுத்து பலூன் வாங்கி தன் குழந்தையிடம் கொடுத்தான் கணேசன். 

குழந்தை மகிழ்ச்சியில் கத்திக்கொண்டு விளையாடி கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாய் பலூன் உடைந்தது. பலூன் உடைந்தும் குழந்தை அழ ஆரம்பித்தது. 

கணேசன் குழந்தை அழுவதை கண்டு கொள்ளாமல் "ஒழுங்கா ஒரு பொருள கூட வச்சிக்காத.. " என்று குழந்தையை கண்டபடி திட்டினான்.

அதை பார்த்துக்கொண்டிருந்த பலூன் வியாபாரி இன்னொன்று எடுத்து அந்த குழந்தையின் கையில் கொடுக்க முற்பட்ட போது "யோவ்.இன்னொன்னுலாம் வேணாம். கொடுக்காதே " என்று சொல்லி கணேசன் தடுத்தான்.

"இந்த பலூன் உங்க குழந்தையின் சிரிப்புக்காக இனாம் சார்" என்று சொல்லி அந்த குழந்தையின் கையில் பலூனை கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்...

அந்த பலூன் வியாபாரியின் சொல் கணேசனுக்கு தலையில் ஓங்கி கொட்டியது போல் இருந்தது. அவமானத்தால் அவன் தலை பூமியை பார்த்தது.