Wednesday, 2 March 2016

காதல் (கொன்று) விடு (சிறுகதை)


"நேரமாயிடிச்சி டி நான் வீட்டுக்கு கலம்புறேன். " என்று சொல்லிவிட்டு வேகமாய் வீட்டுக்கு கலம்பி கொண்டிருந்தாள் நித்யா.


"என்னடி ஒரு நாள் நம்ம  டீம் கூட டின்னர் சாப்டு போக கூடாதா?" என்று இடை மறித்தாள்  தோழி.

"இல்லடி அப்பா எனக்காக சாப்டாம இருப்பார். நாங்க ரெண்டு பெரும் எப்பவுமே ஒண்ணா உட்கார்ந்து தான் சாப்டுவோம். அது எங்க ரெண்டு பேருக்குமே பழகிடிச்சி." என்று சொன்னாள் நித்யா.

அப்போ அவளுக்கு வாட்சப் மணி அடித்தது.

"பாருடி இந்த மெசேஜ் கூட என் அப்பா கிட்ட இருந்து தான் வந்திருக்கும்" என்று சொன்னாள் நித்யா.

நித்யா சொல்லி வைத்தது மாதிரி அப்பாவின் மெசேஜ் தான் "அம்மாடி ஆபிஸ்ல இருந்து கலம்பிட்டியா?" என்று வாய்ஸ் மெசேஜ் கேட்டது.

"கலம்பிட்டேன் பா" என்று நித்யாவும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள்.

"சொன்னேன்ல... பார்த்தியா. சரி நான் கலம்புறேன். நீங்க என்ஜாய் பண்ணுங்க." என்று சொல்லிவிட்டு விர்ரென்று வீட்டுக்கு கலம்பினாள் நித்யா.

நித்யாவின் அம்மா நித்யாவுடைய சிறு வயதிலேயே நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார்கள். ஆனால் அந்த குறை சிறிதும் தெரியாமல் வளர்த்தார் நித்யாவோட அப்பா பாலகுமார். நித்யாவுடைய அப்பாவுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. நித்யா தான் அவருக்கு டச் போன் வாங்கி கொடுத்து அதில் வாட்சப் இன்ஸ்டால் செய்து அதில் எப்படி வாய்ஸ் மெசேஜ் அனுப்பனும் என்று மட்டும் சொல்லி கொடுத்திருந்தாள். அதனால் எப்பவும் நித்யாவும் அவளுடைய அப்பாவும் வாய்ஸ் மெசேஜ் தான் அனுப்பிப்பார்கள்.

நித்யாவுடைய டீமுக்கு புதியதாய் ஒரு டீம் லீட் சேர்ந்தான். அவனுடைய அழகும், பேச்சும், திறமையும் இவளை பெரியதாய் கவர்ந்தது. அவனுக்கும் இவள் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தததால் இவர்கள் இருவரும் சீக்கிரமே காதலில் விழுந்தார்கள்.

அவனுக்காக ஆபிசிலேயே அதிக நேரம் உட்கார்ந்து செலவழிக்க தொடங்கினாள் நித்யா.

வீட்டுக்கு சென்றாலும் அவளுடைய ரூமுக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டு போனிலே செலவழிக்க தொடங்கினாள் நித்யா.

அதனால் அப்பாவுக்கும் இவளுக்குமான இடைவெளி கொஞ்சம் கொஞ்சம் பெரியதாய் ஆனது.

வழக்கம் போல அன்னைக்கும்  தாமதமாய் வீட்டுக்கு வந்தாள் நித்யா. அவளுக்காக பாலகுமார் தூங்காமல் காத்து கொண்டிருந்தார்.

"அம்மாடி அப்பா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று சொன்னார் பாலகுமார்.

"என்ன பா என் கிட்ட போய் இப்படிலாம் கேக்குறீங்க." என்று சொன்னாள் நித்யா.

"இல்ல மா நீ கொஞ்சம் பெரிய பொண்ணாயிட்டா போல  தோணிச்சு அதான் கேட்டேன்" என்றார் அப்பா.

நித்யா அப்பா அருகில் வந்து
"அப்படிலாம் இல்ல பா. எப்பவுமே நான் சின்ன கொழந்தை தான் உங்களுக்கு. சொல்லுங்க பா எதோ சொல்லனும்னு சொன்னீங்க."

"இல்ல மா. இப்பலாம் நீ அப்பா கூட உட்கார்ந்து சாப்டுறது இல்ல சரியா பேசுறது இல்ல. அப்பலாம் அப்பா கூட வந்து பேசுவ விளையாடுவ அதெல்லாம் இப்ப இல்ல. நீ எப்போவுமே அப்பா மடியில கொஞ்ச நேரம் தூங்குவ இப்பலாம் வந்ததும் ரூமுக்கு போய்டுற. எப்பவுமே போன்லயே இருக்கே. நீ வேலை விசயமா அதிகம் உழைக்குரனு விட்டுட்டேன் மா. ஆனா அப்பா அனாதையாய் ஆகிட்ட போல தோணிச்சு மா. அப்பா மடி உன் தலைக்காக ஏங்குதுமா" என்று அப்பா கண்களில் லேசான கண்ணீரோடு வெள்ளந்தியாய் சொன்னார்.

அப்பாவின் பேச்சைக் கேட்டு ஆடிப்போய்விட்டாள் நித்யா. நித்யாவின் கண்களிலும் லேசாய் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

"அப்படிலாம் இல்லை பா கொஞ்சம் வேலை அதிகமா இருந்துது பா. அதான் அப்படி நடந்துடிச்சி" என்று பொய் சொல்லிவிட்டு "இனிமேல் நடக்காம பார்த்துக்குறேன் பா"  என்று வாக்கு கொடுத்தாள்.

அவர் கண்ணை துடைத்துக்கொண்டே"சரி சரி மா... அப்பாவும் அதே தான் நெனச்சேன். இருந்தாலும் மனசுல பட்டத சொல்லிடணும்னு சொன்னேன் மா. அப்பாவ தப்பா நெனைக்கலையே"  என்றார் லேசாய் புன்னகைத்தார் பாலகுமார்.

"ச்சே... ச்சே.... அதலாம் ஏதும் நெனைக்கல பா." என்றாள் நித்யா.

கொஞ்ச நேரம் அப்பாவின் மடியில் படுத்துவிட்டு அவனுடன் பேச அவளுடைய ரூமுக்குள் சென்று விட்டாள் நித்யா.

பாலகுமார் நடந்ததையெல்லாம் யோசித்துக்கொண்டே இருந்ததால் அவருக்கு சோகம் அதிகமாகி நெஞ்சை அடைப்பது போல் ஒரு வலி ஏற்பட்டது.

பாலகுமாருக்கு புரிந்தது தனக்கு எதோ நேர போவதாய். வலி அதிகமாகி கொண்டே இருந்ததால் அவரால் நடக்க முடியாமல் கீழே விழுந்து விட்டார்.

தன் மகளை கத்திக்கத்தி  கூப்பிட்டார் அவள் கதவை அடைத்துக்கொண்டு போனில் பேசிக்கொண்டிருந்ததால் இவருடைய கத்தல் அவளுக்கு சரியாய் கேக்கவில்லை.

அவர் சட்டை பாக்கெட்டில் மொபைல் இருந்ததால் அவளுடைய தொலைபேசிக்கு அழைத்தார் அழைப்பு வெயிட்டிங்கிலிலே சென்றது அவள் ஆர்வமாய் பேசியதாலோ என்னவோ அப்பாவின் அழைப்பை கவனிக்கவில்லை.

அப்பாவுக்கு புரிந்து விட்டது தனக்கு ஏதோ விபரீதம் நடக்கு போகிறது என்பது.

உடனே வாட்சப்பை எடுத்தார் ஏதோ ரெகார்ட் பண்ணி தன் மகளுக்கு அனுப்பிவிட்டு மயக்கமடைந்தார்.

சில நிமிடங்கள் கழித்து போனை வைத்துவிட்டு பார்க்கும்போது அப்பாவிடம் இருந்து போன்வந்ததை அப்போது தான் பார்க்க நேரிட்டது. ஏன்..? இவர் இந்த நேரத்தில போன் செய்தார் என்ற குழப்பத்துடனே ரூமை விட்டு வெளியே வந்தாள்.

அப்பா ஹாலில் மயக்கமடைந்த சூழ்நிலையில் இருந்தார். பதறியபடி ஓடி வந்து அப்பாவை எழுப்பினாள் நித்யா. அவர் எழுந்திருக்கவில்லை. தண்ணி தெளிச்சும் அவர் எழுந்திருக்கவில்லை. உடனே ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்து அவரை ஆஸ்பிடலுக்கு கொண்டு சென்றாள் நித்யா. மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக. தெரிவித்தார். அதிர்ச்சியில் உறைந்ததால் அவளுக்கு அழுகையே வரவில்லை. அவர் இறந்ததற்கு காரணம் அவர் சரியாக உணவு சாப்பிடாதததும் மாத்திரையை  உட்கொள்ளாததும் என்று தெரிவித்தார் டாக்டர்.

ஈம கடமைகளை முடித்து விட்டு ஒவ்வொருத்தராய் வீட்டில் இருந்து சென்று விட்டார்கள். தற்போது வீடே வெறுமையில் சூழ்ந்து இருந்தது.

தன் தொலைபேசியை பார்க்க இரண்டு நாட்களுக்கு பிறகு தான் அவளுக்கு நேரம் கிடைத்தது.
எடுத்து பார்க்கும்போது அப்பாவிடம் இருந்து ஒரு வாட்சப் ரெகார்ட் மெசேஜ் இருந்தது.

அதில் "அம்மா நான் போறேன் மா. அப்பா திரும்பி வரமுடியாத எடத்துக்கு போறேன் மா. வேல வேலைக்கு சாப்புடு. வீட்டுக்கு நேரத்தோட வந்துடு. அப்பா ஏதோதோ  இன்சூரன்ஸ் போட்டு வச்சிருக்கேன் அதலாம் கேட்டு வாங்கி உன் கல்யாணத்துக்கு வச்சிக்கோமா. நல்ல பையனா.." என்று தொடங்கும்போது வாட்சப் ரெகார்டர் கட் ஆகிவிட்டது.

"நான் காதலை விட்டு விட்டேன் பா நீங்க திரும்பவும் வாங்க" என்று அந்த ரெகார்டர்க்கு பதில் சொல்லி கதறி அழுதாள். "என் காதலை வச்சி உங்களை கொன்னுட்டேனே பா. நீங்க வந்துடுங்க பா. வாங்க பா... நீங்க வந்துடுங்க பா..." என்று கதறினாள். ஆனால் இறந்தவர்கள் திரும்ப வர போவதில்லை என்று அவளுக்கு தெரிந்தும் அவள் மனம் அதை உணர மறுத்துக் கொண்டிருந்தது. அவளுடைய அழும் குரல் அந்த வீடு முழுவதும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

3 comments:

Mohan said...

lovely story. touching.

Valli said...

Excellent story.

Kural said...

Semma.