Wednesday, 25 May 2016

சந்தோஷம் (குறுங்கதை)

அந்த ரோடு வழியாக போகணும்னு நினச்சாலே மகேசுக்கு எரிச்சல் எரிச்சலா வரும். ஏனா ரோடு ரொம்ப மோசமா குண்டும் குழியுமா இருக்கும்... ஆனா  விதி தினமும் அந்த ரோட கடந்து தான் அவன் போய் ஆகணும்.

வழக்கம் போல அந்த குண்டும் குழியுமுள்ள  ரோட்டில் மகேஷ் திட்டிக்கொண்டே வண்டியை ஓட்டிகொண்டிருந்தான்.

அதே ரோட்டில் ஒருவர் அவரோட மகளை பைக்கில்  கூட்டிக்கொண்டு வந்தார். குண்டும் குழியும் உள்ள ரோட்டால் அப்பாவின் முகம் ஒரே இறுக்கமாய் இருந்தது...!!

ஆனால் அவரோட மகள் மகிழ்ச்சியாய் காணப்பட்டாள்... ஒவ்வொரு முறை பெரிய பள்ளத்தில் வண்டி செல்லும்போது அவள் "டம்ம்ம்மால்" என்று சந்தோஷ கூக்குரல் எழுப்பினாள்.

சின்ன சின்ன பள்ளத்தில் செல்லும்போது "டமாடமாடமாடமால்" என்று கத்திக்கொண்டு இருந்தாள். அவளுடைய ஒவ்வொரு சத்தத்தையும் கேட்க கேட்க அவளுடைய அப்பாவின் முகம் இறுக்கத்திலிருந்து விடுபட்டு சந்தோசமாக மாறியது..

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மகேஷின் மனதிற்குள்ளும் ஒரு பெரிய மாற்றம் வந்தது. அந்த பள்ளத்தின் மீதிருந்த வெறுப்பு முழுவதுமாய் மாறி அவனும் அந்த குண்டும் குழியுமுள்ள ரோட்டை புன்னகையோடு ரசிக்க ஆரம்பித்து விட்டான்... 

இப்போது ஒவ்வொரு பள்ளத்திலும் விடும் போது "டமால்" என்று மகேசும் கத்திக்கொண்டிருந்தான்.... மனதிற்குள் மட்டும்....

நீதி : எந்த சூழலிலும் மனதிற்கு சந்தோஷப்பட தெரியும். அதை நாம் தான் புரிந்து வெளிப்படுத்தணும்...

Monday, 23 May 2016

பொன்மொழிகள் (Quotes)

1. உன் புன்னகையை அழியாமல்
பார்த்துக்கொள் அது
உன்னை அழியாமல் பார்த்துக்கொள்ளும்..!

2. பறப்பதற்கு ஆசைப்பட்டால் 
பயத்தை விட்டுதான் ஆகனும்...!!!

3. கடவுள் மீதுள்ள நம்பிக்கை 
உனக்கு நல்லது நடக்கும் வரை தான் நீடிக்கும்.

4 மீண்டும் போராடி பார்க்க ஆசைபட்டால் 
ஒரு புது வழியோடு தான் போகனும்....!!!

5. புதியதாய் முயன்று கொண்டே இரு..
புதியதாய் கற்றுக்கொண்டே இருப்பாய்..!!!

6. மலை ஏற முடிவு எடுத்து விட்டால்
முதல் அடியை யோசிக்காமல் வையுங்கள்.
மீதியுள்ள தொலைவை தானாக கடந்துவிடுவீர்கள்...!!

7. அடுத்தவன்(ள்) என்ன நினைப்பான்(ள்) என்று யோசித்தால் 
உன் அழகிய வாழ்க்கை அடியோடு நாசமாகும்...!!!

8. உனக்கு எதிரி என்று எவருமில்லை.
உன் எதிர்மறை எண்ணங்களே உனக்கு எதிரி....!!!

9. யாரிடமும் எதையும் எதிர் பார்க்காதே
உன் வாழ்வினில் ஏமாற்றம் ஒன்று  இருக்காது...!!!

Sunday, 22 May 2016

அவளை தேடுகிறேன்...!!(கவிதை)


அவளை நானும் தேடுகிறேன்.
அழகியை நானும் தேடுகிறேன்.
கண் முன்னே இருந்தவளை திடீரென தொலைத்தேனே..!!
கண்கட்டி வித்தை போல பார்க்கும்போதே தொலைந்தாளே...!!

அவள் கூந்தல் ஓரத்தில் ஒட்டிகொண்டிருக்கும் பூப்போல ஆனேனே
ஒரு முறை என்னை பார்ப்பாளா என்று ஏங்கினேனே

அவள் விழியில் கோலமிட மை உதவியதே
அவள் வாழ்வினில் கோலமிட என் கை உதவுமே

அதை நானும் தெரிவிக்க துடிக்கிறேனே
அவள் மறுத்து விடுவாளோ என்று தயங்கினேனே..!!

சின்னஞ்சிரு பட்டாம்பூச்சியும் அவளிடம் வந்து பேசுதே.
அதைக் கண்டு என் மனமும் ஏங்கித் தவிக்குதே.

உனக்கு என்று காத்துக்கொண்டிருக்குதே நானும் என் மனமும்....
சீக்கிரம் வந்து என்னிடம் சேர்வாயோ...!!!

அழகென்ற திமிரே வேணாம்
உன் அழகை முறியடிக்க நம் குழந்தை இருக்கு..
அதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளடி...!!!.

Friday, 13 May 2016

ஓட்டு போடு (சிறுகதை)

திங்கள் கிழமை எலெக்சன் வேற வருது. தேர்தலில் ஓட்டு போட போறோன்னு சாக்கு சொல்லி சனிக்கிழமையும் திங்கள்கிழமையும் லீவு கேட்கலாமா என்று யோசித்தான் மனோகர். அப்போதுதான் அவன் நினைவுக்கு வந்தது. மனோகரின்  மேனேஜர் சரியான சிடு மூஞ்சி . எப்ப பாரு எரிஞ்சி விழுந்துட்டே இருப்பான்.. அவனுடைய தங்கை கல்யாணத்துக்கே ஒரு நாள்தான் லீவு கொடுத்தான்.  செவ்வாய்கிழமை கிளையன்ட் விசிட் வேற இருக்கு. இவன் சத்தியமா லீவு கொடுக்க மாட்டான் என்று முடிவு செய்து விட்டான்.

ஊருக்கு போறதுக்கு எஙகேயும் டிக்கெட் வேற கிடைக்காது என்ன பண்றதுன்னு  யோசிச்சுட்டே இருந்தான் மனோகர்...

எல்லாரும் ஆபீஸ்ல இருந்து கலம்பியாச்சு இவன் மட்டும் உட்கார்ந்து இருப்பதை பார்த்து மேனேஜர் அவன் கிட்ட வந்தார்.

"ஏன் இன்னும் இங்க இருக்க. ஊருக்கு போகலையா" என்று கேட்டார்.

மனோகர் பெருமையுடன் "இல்ல சார். செவ்வாய் கிழமை நமக்கு க்ளையன்ட் விசிட் இருக்குல. அதனால போக வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். அது மட்டும் இல்ல நான் ஒரு ஓட்டு போடாததால பெரிசா ஒன்னும் நடக்க போறது இல்ல" என்று சொன்னான். 

இப்படி பேசினால் மேனேஜர் பாரட்டுவார்னு எதிர் பார்த்தான். ஆனால் நடந்ததோ வேறு..

மேனேஜர் கோபத்துடன் "என்னையா லூசு போல பேசுற... படிச்ச நம்மலே இப்படி பண்ணா எப்படி. நான் போய் ஒரு வோட்டு போடாததால ஒன்னும் ஆகாதுன்னு சொல்றியே. உன்னலாம் என்ன சொல்றதுனே தெரியல. நீ போடுற ஒரு ஓட்டு ஒரு வேட்பாளர அங்கீகரிக்குது, எப்படினா நீ நல்லவன்.. இந்த நாட்டுக்கு நீ நல்லது செய்வேன்னு நான் நம்புறேன்னு . அது புரியாம இப்படி உலர்னு இருக்க".

அவர் இப்படி பேசுவார்னு அவன் எதிர் பார்க்கவில்லை. கொஞ்சம் ஆடிப்போய் விட்டான்.
"இல்ல சார் அது வந்து, இப்போ எங்கேயும் டிக்கட்  வேற கிடைக்காது." என்று மழுப்பினான் மனோகர்.

"உனக்கு என்ன இப்ப ஊருக்கு போறதுக்கு டிக்கெட் தானே வேணும். கொஞ்சம் பொறு"ன்னு சொல்லிட்டு சில ட்ராவல்ஸ்க்கு போன் பண்ணார். அதில் ஒரு ட்ராவல்ஸ்ஸில டிக்கெட் இருந்தது உடனே அதை புக் பண்ணி விட்டு டிக்கெட்டை மெயில் அனுப்ப சொன்னார். அந்த டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டுவந்து மனோகரிடம் நீட்டினார்.

"இந்தா டிக்கெட் நீ போய் ஓட்டு போடு. ஓட்டு போட்டு முடிச்சதும் க்ளையன்ட் விசிட்டுக்கு வர முடியுமானு பாரு. வர முடியுலனா ஒன்னும் ப்ராப்ளம் இல்ல நான் பார்த்துக்குறேன்."  என்று டிக்கெட்டை கொடுத்து விட்டு வீட்டுக்கு கலம்பினார்.

அவன் ஆச்சரியத்தில் கண்கள் விலகாமல் அவர் நடந்து போவதையே பார்த்துக்கொண்டிருந்தான். தன்னை நினைத்து வெட்கப்பட்டான்... அதே நேரத்தில் தன் மேனேஜரை நினைத்து பெருமைபட்டான்.

Friday, 6 May 2016

பொம்மை (குறுங்கதை)

தன் மகள் நிலாவை கூட்டிக்கொண்டு பொம்மைகள் விற்கும் கடைக்கு சென்றார் அப்பா. கடை வாசலில் அழுக்கான உடை அணிந்து ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தாள்.



அந்த சிறுமி "சார்" என்று சொல்லி கை நீட்ட அவளுக்கு அப்பா 2 ரூபாய் போட்டு பெருமையாய் கடைக்குள் சென்றார்.

உள்ளே சென்றதும் நிலா எல்லா பொம்மையையும் சுற்றி பார்த்துவிட்டு அந்த பொம்மை வேணும் என்று கை நீட்டினாள். அந்த பொம்மை கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருந்தது. இருந்தாலும் அப்பா அதை தன் மகளுக்காக வாங்கி கொடுக்க முற்பட்ட போது எனக்கு இரண்டு பொம்மை வேணும் என்று சொன்னாள் நிலா.

"ஏன்" என்று கேட்க பதில் சொல்லாமல் வேணும் என்று சொல்லி அடம்பிடித்தாள். அவளை சமாதானப் படுத்த முயன்று தோற்று கோபத்தோடும் எரிச்சலோடும் இரண்டும் வாங்கி கொடுத்தார்.

அந்த இரண்டு பொம்மைகளையும் வாங்கி கொண்டு வெளியே ஓடினாள் நிலா. "ஏய் எங்க ஓடுற?" என்று அப்பா கத்தியதை காதில் கொஞ்சம் கூட வாங்காமல் வெளியே ஓடி வந்தாள். அப்பா அவளை பின் தொடர்ந்து ஓடி வந்தார்.

அங்கே நின்ற சிறுமி முன்னாடி போய் நின்று கையில் இருந்த இரு பொம்மையில் ஒரு பொம்மையை நீட்டி "இந்தா வாங்கிக்க. இந்த பொம்மை உனக்கு இந்த பொம்மை எனக்கு" என்று சொன்னாள் மகள்.

"இந்த பொம்மை எனக்கா" என்று ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் கேட்டாள்.
"ஆமா" என்று சொன்னாள் நிலா.

பொம்மையை வாங்கிகொண்டு முகத்தில் மகிழ்ச்சி பொங்க அவளுடைய அம்மாவை நோக்கி ஓடினாள் சிறுமி.

இதை பார்த்துக்கொண்டிருந்த அப்பா தன்னை நினைத்து வெட்கப்பட்டார். அதே நேரத்தில் தன் மகளை தட்டிக்கொடுத்து பாராட்டி அவளை நினைத்து பெருமைப்பட்டார்.

நீதி: பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொருவரின் மனதளவுக்கு தான் அடுத்தவர்களுக்கு உதவ முடியும்.

Monday, 2 May 2016

பயன் (குறுங்கதை)

கதிர் வீட்டில் உள்ள நாற்காலியின் ஒரு கால் முற்றிலும் சேதமடைந்து விட்டது. 

இனிமேல் இது பயன்படாது என்று குப்பையில் வீசினான்.

அந்த உடைந்த நாற்காலியை ஒருவர் கண்டெடுத்து அதை தன் வீட்டிற்கு கொண்டு போனார்.

அந்த நாற்காலியின் இன்னொரு காலையும் உடைத்து, அதை உடைந்த இரு காலுக்கும் நடுவில் பொருத்தினார். இப்போது நாற்காலி முக்காலியாய் மாறியது.

அந்த முக்காலி மேல் கம்பீரமாய் கால்மீது போட்டு உட்கார்ந்தார்.

நீதி: பயன்படாதது என்று எதுவுமில்லை பயன்படுத்த தெரியாதவர் தான் உள்ளனர்.