Sunday, 27 December 2015

பணமும் பசியும் (சிறுகதை )

"யப்பாடா ஒரு வழியா இந்த பெரிய பிரச்சனையை (emergency fix) முடிச்சாச்சு. நாளைக்கு நம்ம கோட (code) டெலிவரி கொடுத்துடலாம் " என்று சொல்லிக்கொண்டே தலையிலிருந்த முடியை இரு கைகளாலும் கோதிக்கொண்டு பெரு மூச்சி விட்டான் ஜவஹர்.


அப்போது தான் அவன் கண்களுக்கு கணினியின் ஓரத்தில் உள்ள மணியை  பார்க்க நேரம் கிடைத்தது. பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி மணி நள்ளிரவு 12 ஆக இருந்தது.

"ஐயயோ! டைம் 12 ஆய்டிச்சே இன்னும் நம்ம டின்னர் கூட சாப்டுலையே" என்று பதறியபடி பைக் சாவியை எடுத்துக்கொண்டு ரூமுக்கு செல்ல தயாரானான்.

ஜவஹருடைய சொந்த ஊர் சேலம். அவன் போரூரில் நண்பர்களோடு ரூம் எடுத்து தங்கிக்கொண்டு கிண்டியில் உள்ள ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் கணிப்பொறியாளனாக வேலை செய்து கொண்டிருக்கிறான். அவனுடன் தங்கி இருக்கும் 3 நண்பர்களும் வெவ்வேறு கம்பெனியில் கணிப்பொறியாளராக வேலை செய்து வருகின்றார்கள்.

போகும் வழியில் எதாவது கடை இருந்தால் நிறுத்தி சாப்ட்டுக்கலாம் என்று முடிவெடுத்து வண்டியை வேகமாய் எடுத்துக்கொண்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினான். ஏனெனில் இந்த நேரத்தில் அலுவலகத்தில் சாப்பிட எதுவும் கிடைக்காது என்று அவனுக்கு தெரியும்.

போகும் வழியில் உள்ள கடைகளை நோட்டம் விட்டுக்கொண்டே சென்றான். ஆனால் அவனது துரதிர்ஷ்டம் அனைத்து கடைகளும் மூடி இருந்தது. சில கடைகளில் சமையல் செய்த பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார்கள்.

சாப்பிட எதுவும் கிடைக்காது என்று தெரிந்ததும் அவனுடைய வயிற்றுக்கு பசி அதிகம் எடுக்க ஆரம்பித்தது .

30 நிமிடத்தில் ரூமை அடைந்தான்.

ரூமுக்கு சென்றவன் நேராக குளிர் சாதன பெட்டியை திறந்து ஏதாவது பழம் இருக்குமா இல்லை வேற எங்கவாவது பிஸ்கட் பிரட் இருக்குமா என்று தேடினான். தேடிப்பார்த்து ஒரு பயனும் இல்லை. பேச்சுலர் ரூம் என்பதால் ரூமில் சாப்பிட எதுவும் இல்லை.

அவனுடைய நண்பர்கள் அனைவரும் நைட் ஸிப்ட்க்கு வேறு சென்றுவிட்டார்கள்.

இவனுக்கு பசி மேலும் மேலும்அதிகமாய் கொண்டே இருந்தது...

ரூமுக்கு சென்றவன் உடைகளை மாற்றிக்கொண்டு மீண்டும் உணவு வேட்டைக்கு பைக் எடுத்துக்கொண்டு கலம்பினான்.

பைக் எடுத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கும்போது ரோட்டின் ஓரமாய் ஒரு விளக்கு எரிவதை கண்டான். அநேகமாய் அது உணவு கடையாய் தான் இருக்கும் என்று முடிவு செய்து அதன் அருகில் தன் வண்டியை செலுத்தினான். அவன் செய்த அதிர்ஷ்டமோ என்னவவோ அது உணவு கடை தான்.

அங்கே ஒரு பெண்மணி தள்ளு வண்டியில் தோசையையும் இட்லியும் சுட்டு விற்றுக்கொண்டிருப்பது போல தெரிந்தது. ஆனால் கடையில் யாருமில்லை. ஒருவேளை இங்கேயும் எதுவும் கிடைக்கலனா இன்னைக்கு நான் அவ்வளவு தான் என்று நினைத்துக்கொண்டே கடையின் அருகே நெருங்கினான்

"என்ன வேணும் பா " என்று அந்த பெண்மணி கேட்டாள்.

"ஏதாவது சாப்ட இருக்குமா" என்று கேட்டான் ஜவஹர்.

"இட்லி தோசை இருக்கு பா " என்றாள்.

இவனுக்கு ஒரே ஆனந்தம்.

"அம்மா 4 இட்லி வச்சி கொடுங்கமா" என்று சொன்னான்.

இட்லி தட்டில் வச்சி  கொடுத்தும் அதை வேக வேகமாய் உண்ண ஆரம்பித்தான்.

"முட்டை தோச ஏதாவது வேணுமா பா " என்று கேட்டாள் அந்த பெண்மணி.

நட்ட நாடு இராத்திரியில் சூடான தோசையை நினைச்சு பாருங்கள். அதுவும் முட்டை தோசை.

"சூப்பர் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே. 2 முட்டை தோச போடுங்கம்மா" என்று மகிழ்ச்சி பொங்க சொன்னான்.

ஒவ்வொரு முட்டை தோசையை அவள் சூடாய் சுட்டு கொடுக்க இவன் அழகாய் தின்று முடித்தான். வயிறு முழுவதும் அவனுக்கு நிறைந்தது.

அப்பொழுது தான் அவனுக்கு பளிச்சென்று கண்ணே தெரிய ஆரம்பித்தது.

கையை கழுவிக்கொண்டு பில் எவ்வளவு மா என்று கேட்டான்.

"50 ரூபா" என்றாள்.

"பசியே இல்லாமல் 500,1000 ரூபாய்க்கு கம்பனி ட்ரீட் என்ற பெயரில் அழித்தது அந்த நேரத்தில் அவனுக்கு ஏன் ஞாபகம் வந்தது என்று அவனுக்கே தெரியவில்லை."

"இந்த மகராசி நல்லா இருக்கணும்னு " என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே பர்சை எடுக்க பேன்ட் பையில் கையை விட்ட அவனுக்கு இன்னொரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அவனது பேன்ட் பையில் பர்ஸ் இல்லை எங்க போனது என்று யோசித்தவனுக்கு ஞாபகம் வந்தது வீட்டுக்கு வந்து உடைகளை மாற்றும் போது பழைய பேன்ட் பையில் இருந்து பர்சை எடுக்க மறந்து விட்டான்.

பசி கொடுமை அதிகமாய் இருந்ததால் அவனுக்கு சோறு தவிர வேற எதுவும் அந்த நேரத்தில் ஞாபகம் வரவில்லை.

"வேற எங்கவாவது வைத்திருக்கோமா என்று 2 பாக்கெட் இருக்குர அரைக்கால் பேண்டில் 200 முறை தேடிவிட்டான்." எதுவுமே இல்லை.

அவன் தேடலை பார்த்துக்கொண்டிருந்த பெண்மணி "என்ன ஆச்சி பா " என்று கேட்டாள்.

"ஒன்னும் இல்ல மா வர அவசரத்தில் பர்சை எடுத்துக்கொண்டு வர மறந்து விட்டேன். நீங்க கொஞ்ச நேரம் கொடுத்தீங்கனா நான் போய் எடுத்துக்கொண்டு வந்துடுறேன் " என்று ரொம்பவும் மிகவும் தயங்கி கொண்டே சொன்னான்.


அதற்கு அந்த பெண்மணி "பரவாயில்லை பா நீ நாளைக்கு வந்து கொடு. மணி ஏற்கனவே 1மணி ஆக போகுது. " என்று சொன்னாள்.

இந்த பதிலை அவன் சற்றும் எதிர் பார்க்கவில்லை. அதை கேட்டதும் ஆச்சரியத்தின் உச்சிக்கே போனான்.

"ரொம்ப நன்றி மா " என்று கொஞ்சம் தூரம் வண்டியை எடுக்க நடந்தவன் ஏதோ யோசித்தவனாய் திரும்ப வந்தான்.

"அம்மா கேக்குரனேனு தப்பா நினைச்சிக்காதீங்க.. நான் இந்த கடைக்கு வருவது இதான் முதல் முறை. அப்புறம் எந்த நம்பிக்கைலமா நாளைக்கு வந்து காசு கொடுங்கன்னு சொல்றீங்க."

அதற்கு அவள் புன்னகைத்துக்கொண்டே  "தம்பி! இரவு 12 மணிக்கு மேல ஒருத்தன் சாப்ட வரானா அவன் ஏமாத்தணும்னு வர மாட்டான். உணமையிலேயே பசியோட தான் வருவான். அப்படி வரவங்களுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கும் அவங்களால பணத்த சாப்பிட முடியாதுனு.
பசியில பணம் மறந்து போகுறது ஒரு இயல்பான விஷயம் தான் பா. எனக்கு இது  நல்லாவே தெரியும். " என்று சொன்னாள்.

அந்த பெண்மணியை பார்த்து கை எடுத்து கும்பிட்டு மறுபடியும் நன்றி சொல்லிவிட்டு வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அந்த பெண்மணியின் அந்த வார்த்தைகள் அவனுக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்க்கை பாடங்களை கற்று கொடுத்தது.


Monday, 21 December 2015

தோத்துப் போடா (பாடல்)


தோத்துப் போடா உன்ன தான்டா
நெறைய முறை தோத்துப் போடா  (தோத்துப் போடா....)

வாழ்க்கை இருக்கு நேரம் இருக்கு 
தோத்துப் போக மனசும் இருக்கு

தோற்பதால் வெட்கமில்லை
தோல்வியால் நஷ்டமில்லை

தோல்வியை நீயும் ரசித்துப் பாருடா
அது சொல்லும் கதை உனக்கு ஆயிரம் டா (தோத்துப் போடா....)

தேடி தேடி தோத்து போ
புது புது முறையில நீயும் தோத்து போ

தோல்வியும் வெற்றியும் ஆகுமே
நீ புது முறையில தினமும் தோத்தாலே

ஜெயிக்கும் போது இருக்கும் உறவு
தோற்கும் போது இருக்காது

சிரிக்கும் போது சிரித்த உறவும்
நீ அழுகும் போது கிடைக்காது

அதனால் (தோத்துப் போடா....)

தோல்விக்கு நீயும் காத்திரு
அதை அனுபவிக்க நேரம் பாத்திரு

வாழ்கையை நீயும் புரிஞ்சிக்கோ
அத தோற்று பார்த்து தெரிஞ்சிக்கோ (வாழ்கையை...)

தலைவனா ஆக தோற்கணும்
அறிஞனா ஆக தோற்கணும்
தலைக்கனம் குறைய தோற்கணும்
உன் மதிப்ப நீ தெரிஞ்சிக்க தோற்கணும் (தலைவனா....) (தோத்துப் போடா....)


Wednesday, 16 December 2015

சின்ன வயசு நினைவு (புரியாத வாழ்க்கை.)..



சின்ன வயசுல பள்ளிக்கூடம் பிடிக்கல பாடமும் பிடிக்கல
ஆனாலும் தினமும் போனேனே டீச்சரின் மேல் உள்ள பயத்திலே...

தேர்வும் பிடிக்கல அதை எழுதவும் பிடிக்கல - ஆனாலும்
எழுதினேனே அம்மா அப்பாவின் மேல் உள்ள பயத்திலே.....

வீட்டுல வாங்கி வச்சது சாப்பிட தோணல
வீட்டுல செஞ்சதும் புடிக்கல.
ஆனால் பள்ளிக்கு வெளில விக்கிற
ஆயா கையால சாப்பிட மட்டும் பிடிச்சிருக்கு
அது எப்படினு எனக்கும் புரியல.

அக்காவோ தங்கையோ அண்ணனோ தம்பியோ
எந்த வித்தியாசமும் பார்த்ததில்ல
யாரையும் ஒதுக்கி விளையாடியதில்லை
சண்டை வந்தா அடிச்சிக்காம இருந்ததில்லை.
அதிகமா அடி வாங்கிட்டா
அம்மாவிடமோ பாட்டியிடமோ
புகார் செய்ய தவறியதில்லை.

எந்த நாட்காட்டியில் யாரும் பதிவிடவில்லை
ஆனாலும் ஒரே நேரத்தில் ஊரே
ஒரே விளையாட்டு தான் விளையாடினோம்
அது எப்படினு எனக்கு புரிஞ்சியதில்ல
புரிஞ்சிக்கவும் முயற்சி செய்ததுமில்ல.


சரியாக கணக்கு தெரியாது-ஆனாலும்
திருடி தின்ன மாங்காயும் புளியங்காயும்
எலந்த பழத்தையும் பகிர்ந்து உண்ணும் போது
சண்டையே  வந்ததில்ல.

ஒரு சின்ன பசங்களையும் போலீஸ் கூப்பிட்டு மிரட்டியதில்லை
ஆனால் போலிஸ பார்த்து நான் ஏன் பயந்து பயந்து
தீவிரவாதி போல ஒடினேன்னு
இதுவரை எனக்கு விளங்கவில்ல ...!!

கை நிறைய காசு இருந்ததில்லை - ஆனால்
அதை காரணம் காட்டி ஊர் சுத்தாம இருந்ததில்ல.

பெரியவங்க யாரும் பள்ளிகூடத்துக்கு போனதில்ல - அதனால
சீக்கிரம் பெரியவனா வளர்ந்துடனும்னு
நினைச்சிகிட்டேஇருந்தேன்
இப்போ பெரியவனா வளர்ந்துட்டேன் - ஆனா
பள்ளிகூடத்துக்கு போகணும்னு மனசு துடிக்குது
அது எதுக்குன்னு எனக்கு இன்னும் புரியல.


காதல் தோல்வி (பாடல்).


மனம் என்ற ஒன்று
தினம் தினம் பாடாய் படுகிறதே..

காற்றை போல் உருவமில்லை
உணரத்தான் முடிகிறதே...

உன் விழிகளில் வழியும் நீரை
துடைக்க என் கைகள் துடிக்கிறதே

இது கனவா இல்லை நிஜமா
என புரியாமல் விழிக்கிறேன் விழிக்கிறேன். (மனம் என்ற ஒன்று..)

அவளை பார்த்த அந்த நொடி அந்த நொடி
என் ஆயுள் பாதி முடிந்ததேன் என்று தோன்ற வைத்ததே..

ஆனால் அந்த ஒரு நொடி ஒரு நொடி
எல்லாம் எல்லாம் கை மீறி போனதே போனதே போனதே..

வாழ்க்கை முழுவதும் உன்னோடு
வாழ ஆசை பட்டேன் நானே நானே

உன் வாழ்க்கையே முடிந்து போனது என்று
சொன்னாயே சொன்னாயே நீயே நீயே... (மனம் என்ற ஒன்று..)

உன் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ஒன்றானதே
அது ஏன் இன்று இரண்டு துண்டானதே...!
அது ஏன் இன்று இரண்டு துண்டானதே...!

வாழவே  பிடிக்கவில்லை எனக்கு தான்  எனக்கு தான்
எமன் முன்னே போயி நின்றேன் சாக தான் நான் சாக தான்

தோல்விகள் என்னை துரத்தியதே
சாவிலும் என்னை விரட்டியதே விரட்டியதே.. (மனம் என்ற ஒன்று..).

Monday, 14 December 2015

புரிதலின் எல்லை (சிறுகதை)

நம்ம காதலை அப்பாகிட்ட எப்படி சொல்றது என்று  தெரியாமல் மிகவும் குழப்பமாக இருந்தாள் மைதிலி.

அங்கும் இங்கும் அலைந்தவாறு இரவெல்லாம் உறக்கமில்லாமல் தவித்தாள்.

அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு  சாமியெல்லாம் கும்பிட்டு விட்டு அப்பா மோகனுக்காக காத்துக்கொண்டிருந்தாள்.

காலையில் அலுவலகத்திற்கு செல்ல தயாராய் இருந்த அப்பாவின் முன் பவ்யமாய் நின்றாள்.

அவளை பார்த்ததும் அப்பாவிற்கு புரிந்து விட்டது இவள் ஏதோ சொல்ல தயங்குகிறாள் என்று.

"என்னம்மா" என்று கேட்டார் மோகன்.

"ஒன்னும் இல்ல பா " என்று சொன்னாள்.

"பரவாயில்ல மா. சொல்லுமா" என்றார் மோகன்.

வாயிலிருந்து வார்த்தை வரவும் அதை முழுங்கவும் செய்து கொண்டே இருந்தாள்.

மிகவும் தயங்கி கொண்டே "இல்ல பா, என் கூட ரமேஷ் என்ற ஒருத்தன் வேல பார்க்குறான் பா. ரொம்ப நல்ல பையன்  பா. அவன் குடும்பமும் நல்ல குடும்பம் பா" என்றாள்.

"அதற்கு-மா" என்றார் மோகன்.

"எனக்கு அந்த பையன  பிடிச்சிருக்கு" என்று இழுத்தாள்.

"என்ன மா அந்த பையன காதலிக்கிறாயா?" என்றார்.

"இல்ல பா உங்களுக்கு பிடிக்கலேன்னா வேணாம் பா" என்றாள்.

மோகன் சிரித்துக்கொண்டே.

"5 மணிக்கு அவர நம்ம வழக்கமா போற ஹோட்டலுக்கு வர சொல்லுமா. பேசலாம். உங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் சரியா இருந்தா கல்யாணம் பண்ணி வச்சிடலாம் " என்றார்.

அதை கேட்டதும் உள்ளுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி பறப்பது போல் ஒரே ஆனந்தம் அளவளாவிக் கொண்டிருந்தது.

இருந்தாலும் இந்த மாதிரி எதார்த்தமான வார்த்தைகளை அவளால் நம்பவே முடியவில்லை. பெரியதாய் அப்பா ஆர்ப்பாட்டம் பண்ணுவார் என்ற எதிர்பார்த்த அவளுக்கு ஏமாற்றம்.

உடனே ரமேசுக்கு போன் செய்து நடந்ததை தெரிவித்தாள். அவனுக்கும் பெரிய சந்தோசம்.

"சரியாய் 5 மணிக்கு நான் வந்துடுவேன் " என்றான்  மகிழ்ச்சி பொங்க.

"ஹே அப்பா பொருத்தம் சரியா இருந்தா தான் கல்யாணம் செய்யலாம்னு சொன்னாரு டா .. அதனால நான் என் ஜாதகத்த வாட்ஸ்ஆப்ல அனுப்புறேன். நீ ரெண்டு ஜாதகத்துக்கும் பொருத்தம் பாரு. சரியா இருந்தா விட்டுடு. இல்லைனா ரெண்டு பேருக்கும் பொருந்துற போல உன் ஜாதகத்த தயார் செஞ்சி எடுத்துட்டு வந்து அப்பா கிட்ட கொடுத்துடு" என்று சொன்னாள் மைதிலி.

அன்றைக்கு அலுவலகத்துக்கு லீவ் போட்டு விட்டு ஜாதகம் பொருத்தம் பார்க்க புகழ் பெற்ற ஒரு ஜோதிடரிடம் சென்றான்.

அவர் இரண்டு ஜாதகத்தையும் வாங்கி பார்த்தார்.

என்ன ஆச்சரியம் இரண்டு ஜாதகத்துக்கும் அத்தனை பொருத்தமும் சரியாய் இருந்தது.

அந்த சந்தோசத்தில் அந்த ஜோதிடர் கேட்ட தொகைக்கும் அதிகமாய் கொடுத்து நன்றி சொல்லிவிட்டு மைதிலிக்கு போனில் தகவலை தெரிவித்தான்.

அவளுக்கு பெரிய நிம்மதி.

மாலை 4.30 மணிக்கே ரமேசும் மைதிலியும் ஹோட்டலுக்கு சென்று மோகனுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.

சரியாய் 4.45 மணிக்கு மோகன் வந்தார். மோகனுக்கு ரமேஷை அறிமுகம் செய்தாள் மைதிலி..

தற்போது  மூன்று பேரும் சுற்றி அமர்ந்து கொண்டிருந்தார்கள். மைதிலி பதற்றத்தில் இருந்ததால் தன் நகத்தை பிய்த்துக்கொண்டிருந்தாள்.

அப்போது மோகன் பேச ஆரம்பித்தார்.

"நீங்க எத்தன வருசமா இந்த மொபைல யூஸ் பண்றீங்க" என்று மோகன் ரமேஸ் கையில் இருந்த ஆன்டிராய்டு மொபைலை காட்டி கேட்டார்.

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னது சம்பந்தம் இல்லாமல் மொபைலை பற்றி கேட்குறார் என்று நினைத்துக்கொண்டே.
"1 வருஷம் அங்கிள்" என்று சொன்னான் ரமேஷ்.

"நீங்க எத்தன வருசமா காதலிக்கிறீங்க" என்றார்.

"3 வருஷம் அங்கிள் " என்றான் ரமேஷ்.

"இதுவரை ஏதாவது உங்களுக்குள் மறைத்து இருக்கிறீர்களா ?" என்று கேட்டார் மோகன்.

"எதுவும் மறைத்ததில்லை அங்கிள்" என்றான் ரமேஸ்.

"நீ எப்படி மா?" என்று மைதிலியை பார்த்து கேட்டார்.

"நானும் எதுவும் மறைத்ததில்லை  பா" என்றாள் மைதிலி.

"உங்க காதல் எவ்வளவு உறுதியானது என்று நினைக்குறீங்க?" என்று இரண்டு பேரிடமும் அந்த கேள்வியை முன் வைத்தார்.

"மைதிலிக்காக என் உயிரை கூட கொடுப்பேன் அங்கிள்" என்றான். அதே மாதிரி பதில் மைதிலியிடமும் இருந்தும் வந்தது.

"உங்க உயிரலாம் கொடுக்க வேண்டாம். உங்க இரண்டு பேரோட போன் மட்டும் கொடுங்க" என்றார் மோகன்.

இரண்டு பேரும் புரியாமல் விழித்தார்கள் எதுக்கு மொபைலை கேக்குறார் என்று.

இருந்தாலும் இரண்டு பெரும் தங்களுடைய மொபைலை அவரிடம் நீட்டினார்கள்.

அந்த இரண்டு மொபைலையும் வாங்கி கொண்டு ரமேஷ் மொபைலை மைதிலியிடமும் மைதிலி மொபைலை ரமேசிடம் கொடுத்தார் மோகன்.

கொடுத்துவிட்டு பேச ஆரம்பித்தார் மோகன் "எனக்கு ஜாதகம் ஜோசியம் மேலலாம் சுத்தமா நம்பிக்கை இல்ல. அதை பார்த்து நடந்த எவ்வளவோ கல்யாணம் தோல்வியில் முடிஞ்சத நான் பார்த்திருக்கேன்.
உங்கள் வருங்காலத்தில் பிரச்சனை வருவதற்கான மூலப்பொருள் நீங்க கையில் வைத்திருக்கிறீர்களே இந்த மொபைல் தான். அதனால் உங்க இரண்டு பேருடைய மொபைலையும்  நல்லா ஆராய்ந்து பாருங்க. பார்த்ததுக்கு அப்பறம் ஒரு மணி நேரம் கழித்து வந்து என்னிடம் உங்களுடைய முடிவை சொல்லுங்க. அந்த முடிவு படியே நடக்கலாம்".

"இதென்னப்பா சின்ன புள்ளதனமா இருக்கு ரமேஷ் என்னிடம் எதுவுமே மறைத்ததில்லை நானும் மறைத்ததில்லை " என்று வாதிட்டாள் மைதிலி.

"இருக்கட்டும் மா. ஒரு மணி நேரம் கழித்து இதே மாதிரி அப்பாவிடம் சொன்னால் நான் ரொம்ப சந்தோசப்படுவேன்"  என்று பதில் சொன்னார்.

இரண்டு பெறும் அதை ஆமோதித்து இரு வெவ்வேறு இடங்களில் தனிமையில் அமர்ந்து மொபைலை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.

ஒரு மணி நேரம் முடிந்தது.

இருவரும் மோகன் முன் வந்து நின்றார்கள். இருவடைய முகத்திலும் ஒரே இறுக்கம் காணப்பட்டது.

அவர் முன் உட்கார்ந்த பிறகு சில நிமிடங்கள் மெளனமாக இருந்தார்கள்.

"இப்ப உங்களுடைய முடிவை நான் தெரிஞ்சிக்கலாமா" என்றார் மோகன்.

இரண்டு பேருடைய முகத்திலும் இன்னும் மௌனம் மட்டுமே குடி இருந்தது.

பதில் இரண்டு பேரிடமும் இருந்து வரவில்லை.

மோகனுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரிந்தது அதனால் சின்ன மெல்லிய சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.



Thursday, 26 November 2015

இரத்தத்தின் வேகம்...(சிறுகதை)

"ஹே அரவிந்த்..!! அங்க பார் அருண் கார் எவ்வளவு வேகத்துல பறக்குதுன்னு நீ என்னடானா மாட்டு வண்டி போல ஓட்டினு இருக்க" என்று அரவிந்த் கூட இருந்த நிலா கடிந்து கொண்டாள்..

(அருண்,ரீமா, மலர் மற்றும் பிரபு ஒரு காரிலும் அரவிந்த், நிலா,ரீகன் மற்றும் ஹேமா மற்றொரு காரிலும் புத்தாண்டை கொண்டாட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்க்கு சென்று கொண்டிருக்கின்றார்கள்.)

"போகட்டும் போகட்டும் எவ்வளவு தூரம் போய்டுவான்... இப்ப பாரு ஐயாவோட வேகத்த...!!" என்று தன்னுடைய வண்டியின் வேகத்தை கூட்டினான்.

வண்டியில் உள்ள மற்ற நண்பர்கள் அருணையும் அரவிந்தையும் "சூப்பர்....  அப்படி தான்.... அடிச்சு தூக்கு மச்சி ....!!!!"" என்று உற்சாகக் குரலில் கத்திக்கொண்டே ஊக்குவித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் கார்களில் ஒலிக்கும் அந்த ஆடியோ ஒலி அவர்களின் உற்சாகத்தை குறையாமல் பார்த்துக் கொண்டது.

இரண்டு கார்களும் அதிவேகத்தில் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு முந்திக்கொண்டு சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது "போகாதீங்க ..!!!" என்று கணீரென்று ஒரு குரல் கேட்டது. அந்த குரல் அவர்களின் போட்டுக்கொண்டிருந்த சத்தத்தையும் அவர்களின் கார்களில் ஒலித்துக்கொண்டிருந்த அந்த இசையையும் தாண்டி அவர்களின் காதில் சத்தமாய் ஒலித்தது.

அந்த ஒலி கேட்டதும் அடுத்த நொடி "என்ன டா சத்தம் இது" என்று தெரிந்து கொள்ள அவர்களுடைய காரை ரோட்டின் ஓரமாய் நிறுத்தி திரும்பி பார்த்தனர்.

அப்போது அவர்களின் வண்டியில் இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு சாமியார் நின்று  கொண்டிருந்தார்.
அந்த சாமியார் காவி உடை உடுத்தி கொண்டு,  நீண்ட சடையுள்ள முடியை வைத்துக்கொண்டு,  கழுத்தில் ருத்ராட்சை மாலைகளை போட்டுக்கொண்டு  திருநீரை உடல் மற்றும் நெற்றி முழுவதும் பூசிக்கொண்டு, சந்தனம் மற்றும் குங்குமம் கலந்த பொட்டை வைத்துக் கொண்டு அகன்ற விழிகளோடு அவர்களை உற்று நோக்கி கொண்டிருந்தார்.

அவரை பார்த்ததும் அனைவரும் ஒரு நொடி பயந்தே விட்டார்கள்.

அடுத்து அவர் என்ன சொல்ல போறார் என்ன செய்ய போறார் என்று தெரியாமல் அவரையே பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"உங்கள் வேகத்தை நீங்கள் குறைத்தே ஆகணும். மீறினால் கார் முழுவதும் இரத்தத்தால் நிரம்பும். 140 கி.மீ வேகத்தில் போவதால் ஒரு நன்மையையும் நடக்க போவதில்லை " என்று சாமியார் எச்சரிக்கை கலந்த கட்டளையோடு சொல்லிக்கொண்டே அவர்களுடைய கார்களை நோக்கி நடந்து வந்தார்.

சாமியார் கிட்ட நெருங்க இவர்களுக்கு பயம் தொற்றிக்கொண்டது. பதற்றத்தோடு காரை விர்ரென்று எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

இரு வண்டியும் சம மெதுவாக வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரீகன் "என்னடா சாமியார் இப்படி சொல்றாரு.. இப்ப என்ன பண்ணலாம் டா ?" என பயத்தோடு கேட்டான் .. அதுக்கு அரவிந்த் "டாய் அவன பார்த்தா பைத்தியக்காரன் போல தெரியுது.. இல்ல கொள்ளை அடிக்குற கும்பல் கூட இருக்கலாம். நீ என்னடானா அவன் பேசுன பேச்சலாம் பெரிசா எடுத்துடு பேசிட்டிருக்கனு" என்று திட்டினான்.

அர்விந்த் காரில் உள்ள மற்றவர்களும் அதை ஆமோதித்தார்கள்.

"இல்ல அரவிந்த் அவ்வளவு சுலபமாய் அந்த சாமியார் பேச்சை நினச்சிட வேணாம்னு என் மனசுக்கு தோணுது" என்று அருண் சொன்னான்.

"சரி நீங்க வேணும்னா கட்ட வண்டி ஓட்டிட்டு வர போல வாங்க பா நான் ரிசார்ட்டுக்கு போய் அங்க இருக்கேன்" என்று அர்விந்த் சொல்லிவிட்டு அவர்களின் பதிலுக்கு காத்திருக்காமல்  காரை சர்ரென்று எடுத்துக்கொண்டு கலம்பிவிட்டான்.

"சரி அவன் அங்க போய் இருக்கட்டும். நாம பொறுமையா போகலாம். ஓகே வா ?" என்று கூட இருக்கும் நண்பர்களிடம் கேட்டான். அவர்கள் ஏற்கனவே பயத்தில் இருந்ததால் அருண் கேட்டதற்கு சரி என்று தலையை ஆட்டினார்கள்..

அருணுக்கு அப்போதான் ஞாபகம் வந்தது இரு கார்களும் போட்டிக்கொண்டு வேகமா வரும் போது "ஹே அருண் சூப்பர் டா. வண்டி 140கி.மீ வேகத்துல பறக்குது இப்போ...!  " என்று ரீமா சொன்னது. அந்த சாமியாரும் அவர்கள் வந்த வேகத்த சரியாய் கணித்தது.

உடனே அதை பற்றி தன் நண்பர்களிடம் அருண் சொன்னான். அதை அவர்கள் கேட்கும் போது அனைவருடைய  விழியும் பயத்தில் பெரிதானது.

"அப்போ அந்த சாமியார் சொல்றது போல ஏதோ ஒரு பெரிய அசம்பாவிதம் நடக்க போகுது போல " என்று அருண் மிகவும் பயந்த குரலில் சொன்னான்.

"அப்போ வேகமாய் போய் இருக்க அரவிந்துக்கு கண்டிப்பா ஆபத்து வர போகுது. டேய் பிரபு அரவிந்துக்கு போன் பண்ணி அவன் வண்டிய உடனே நிறுத்த சொல்லு.. எல்லோரும் ஒண்ணா போலாம்னு சொல்லு" என்று அருண் சொன்னான்.

"சரி" என்று பிரபு சொல்லிவிட்டு அரவிந்துக்கு போன் செய்தான். அவனுடைய மொபைல் அனைத்து வைக்கப்பட்டிருந்ததாய் எதிர் முனையில் தெரிவித்தது.

"டேய் அருண் . அரவிந்த் நம்பர் சுவிட்ச் ஆப் டா..!!" என்று பிரபு பதற்றத்தோடு  சொன்னான்.

"ஹே என்னடா சொல்ற " என்று சொல்லிக்கொண்டே வண்டியை ஓரமாய் நிறுத்தினான் அருண்.

இப்போது அவர்களை பயம் முழுவதும் ஆட்கொண்டிருக்கிறது.

"சரி ஹேமா நம்பர்க்கு பண்ணுவோம் " என்று போன் செய்ததும் அந்த நம்பரும் சுவிட்ச் ஆப்.

"அடுத்து நிலா நம்பர்" அதுவும் சுவிட்ச் ஆப்.

கடைசியாய் ரீகன் நம்பருக்கு முயற்சி செய்தனர் அதில் மட்டும் தொலைபேசி அடிக்கும் ஒலி கேட்டது. ஆனால் எதிர் முனையில் இருந்து எந்த பதிலும் இல்லை.

இவர்களுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. "அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரியலையே" என்று புலம்பினார்கள்.

"மச்சி பிரபு நீ ரீகனுக்கு போன் பண்ணிட்டே வா. நான் ரிசார்ட்டுக்கு போற வழியிலேயே போறேன். " என்று அருண் சொன்னான்.

ரீமாவும் மலரும் அவர்களுக்கு எதுவும் நடக்க கூடாதென்று கடவுளை வேண்டிக்கொண்டே வந்தார்கள்.

ஆனால் அவர்களின் வேண்டுதல் பலிக்காது என்று அவர்களுக்கு தெரியாது.

"ஹே அங்க பாருங்க" என்று ஒரு விபத்தை காட்டி அருண் பதற்றம் கலந்த குரலில் அலறினான்.

உள்ள இருந்த அனைவரும் உற்று நோக்கினார்கள். பார்த்தால் அது அரவிந்த் கார் தான். அவர்களுடைய காரை ஓரமாய் நிறுத்திவிட்டு 4 பேரும் இறங்கி ஓடினார்கள்.

அந்த கார் மரத்தில் மோதி முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கி இருந்தது.

விபத்துக்குள்ளான கார் அருகே நெருங்கி பார்த்த பொது அனைவரும் அடி பட்டு இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். உடனே ஆம்புலன்சுக்கு போன் செய்து வர வழைத்து அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சைக்குப் பின் அரவிந்தும் அவனுடைய நண்பர்களும் உயிர் பிழைக்கின்றார்கள்.

ஒரு மாத ஓய்வுக்கு பின் அனைவரும் மனதாலும் மற்றும் உடம்பாலும் பழைய நிலைக்கு திரும்புகின்றார்கள். அர்விந்தோட காரும் பழுது பார்க்கப்பட்டு புதியது போல் ஆனது.

அர்விந்த் வீட்டு மொட்டை மாடியில் அனைவரும் அமர்ந்து கொண்டு பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தார்கள் அப்போது அரவிந்த் "எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்கடா நான் யார் பேச்சையும் கேக்காம வேகமாய் போய் இப்படி பண்ணிட்டேன். " என்று அழுது கொண்டே சொன்னான்.

"அதெல்லாம் ஒன்றும் இல்லடா விடுடா அதான் இப்போ எல்லாருக்கும் சரி ஆகிடிச்சுல" என்று மற்றவர்கள் அரவிந்தை தேற்றினார்கள்.

"நடுவுல ஒரு நாய் வந்ததால தான் டா உன்னால வண்டிய கண்ட்ரோல் பண்ண முடியாம போச்சி. அதனால என்ன விடு இப்போ " என்று நிலா அவனை தேற்றினாள்.

அரவிந்த் அழுகையை துடைத்துக்கொண்டே "உண்மையிலேயே என்னுடைய தப்புதான் டா  நான் அந்த சாமியார் சக்தியை குறைவா எடை போட்டுட்டேண்டா கொஞ்சம் புத்தியை உபயோகப்படுத்தி இருந்தா கூடநாம இவ்வளவு பெரிய ஆபத்துல சிக்கி இருக்க மாட்டோம்" என்று சொன்னான்.

"என்னடா சொல்ற" என்று புரியாமல் ஹேமா விழித்தாள் .

"ஆமா கொஞ்சம் நல்லா யோசிச்சுப் பாருங்க நாம எவ்வளவு சத்தம் போட்டு மியூசிக்லா கேட்டுக் கொண்டு போயிட்டு இருந்தோம் ஆனால் அவர் எங்கிருந்தோ சொன்ன "நிறுத்துங்க" நமக்கு எப்படி தெளிவா கேட்டுது?" என்று கேட்டான்.

"ஹே ஆமா இல்ல" என்று சொல்லிக்கொண்டே மலரும் ரீமாவும் ஆச்சரியத்தில் எழுந்து நின்றார்கள்.

"நாம் வந்த வேகத்தையும் அவர் சரியா கணிச்சாறு மச்சி" என்று அருண் சொன்னான். "ஆனால் எனக்கு நீங்க போனதுக்கு அப்புறம் தான் எனக்கு ஞாபகம் வந்தது" என்று மேலும் தெரிவித்தான்.


"அதே போல் வண்டி ரத்தத்துல நிரம்பும்னு சொன்னாரு. நான் உங்க வண்டிய பாக்கும் போது வண்டி இருக்கை முழுசா ரத்தத்தாலே நனைஞ்சி இருந்தது." என்று மேலும் விளக்கினான் அருண்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்கும் அப்போ தான் அந்த  சாமியாரின் அற்புத சக்தி அவர்களுக்கு புரிந்தது.

"அவர் பேச்சை கேட்டதனால அட்லீஸ்ட் நீங்களாவது விபத்துல மாட்டாம இருந்தீங்களே அதுக்காக அவர சந்திச்சி நன்றி சொல்லிட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டு வரலாம் " என்று அர்விந்த் தெரிவித்தான்.

"அனைவரும் சேர்ந்து அதே இடத்திற்கு அந்த சாமியாரை சந்திக்க சென்றனர்.

பார்த்தால் ரோட்டோரம் சாமியார் அமர்ந்து கொண்டு கையில் எதையோ வைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.

சாமியார் முன் அந்த 8 பேரும் போய்  நின்றார்கள்.

சாமியார் அவர்களை ஏற இறங்க பார்த்து விட்டு "என்ன வேணும்" என்ற குனிந்து கொண்டே கேட்டார்.

"இல்ல சாமி போன மாசம் நாங்க இந்த வழியா போகம் போது  நீங்க எங்களை எச்சரிக்கை படுத்தியும் கேக்காம போய் ஒரு கார் விபத்துல மாட்டிகிட்டோம் .. உங்க பேச்சை கேட்டதனால இன்னொரு கார் விபத்துல இருந்து தப்பிச்சிடிச்சு" என்று அருண் சொல்லிக்கொண்டிருந்தான்.

"அதற்கு" என்று சாமியார் இடைமறித்தார்.

"இல்ல சாமி உங்க கிட்ட நன்றி சொல்லிவிட்டு அப்படியே ஆசீர்வாதம் வாங்கிட்டு போலாம்னு வந்தோம்" என்று தெரிவித்தான் அர்விந்த்.

 "சரி.. அந்த இரண்டு கார் நிக்குதே உங்களுடையது தானே? அந்த கார்ல தானே வேகமா போனீங்க?" என்று சாமியார் கேட்டார்.

"ஆமாம் சாமி" என்று அரவிந்தும் அருணும் சொன்னார்கள்.

"சரி அப்போ ஒரு 5000 ரூபாயை என்னிடம் கொடு " என்று சாமியார் கேட்டார்.

அரவிந்துக்கும் மற்றவர்களுக்கும் எதுவும் புரியவில்லை இருந்தாலும் சாமியாரை முழுசா நம்புனதால மறு பேச்சு கேட்காம 5000 த்தை எடுத்து சாமியாரிடம் கொடுத்தார்கள்.

அதை பெற்றுக்கொண்டதும் சாமியார் அந்த இரண்டு காரின் எண்களை பேனா எடுத்து காகிதத்தில் எழுதிக்கொண்டு சின்ன டென்ட் போல ஒரு வீட்டுக்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்.

வரும்போது ஒரு காகிதத்துடன் வந்து அதை அவர்களிடம் நீட்டினார்.

அந்த காகிதத்தை அரவிந்த் பெற்றுக்கொண்டு ஆர்வமாய் பிரித்தான் அது என்னவாய் இருக்குமென்று. அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த காகிதத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அந்த காகிதத்தை பார்த்த அவர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு புரியாமல் விழித்தனர்.

"என்னதுங்க சாமி இது" என்று மெல்லிய குரலில் காகிதத்தை நீட்டி சாமியாரிடம் கேட்டான் அரவிந்த்.

"ஆமாம் பா ஓவர் ஸ்பீடுக்கு அபராதம் விதிச்சிருக்கு என்று சாமியார் தெரிவித்தார்.

"என்னங்க சாமி எங்கள ஆசீர்வாதம் பண்ணுவீங்கனு பார்த்தா பைன் போட்டு கொடுக்குறீங்களே" என்று அரவிந்த் கேட்டான்.

"ஆசிர்வாதமா என்கிட்டயா?" என்ற சாமியார் சொல்லி பலமாய் சிரித்தார்.  சிரித்துவிட்டு "போங்கடா பரதேசிங்களா நான் சாமியார்லா இல்ல நான் ஒரு ட்ராபிக் போலீஸ் டா .. வேகமா வர வண்டியா நிறுத்துலாம்னு பார்த்தா எங்க மேலேயே இடுச்சிட்டு நிற்காம போயிடுறீங்க .  இதுவரை ரெண்டு போலீஸ்காரங்க  செத்து போய்ட்டாங்க. அதுக்குதான் உங்கள புடிக்கறதுக்கு இப்படி ஒரு கெட்டப்."

"என்னது கெட்டப்பா" என்று  எல்லோரும் கோரசாக கேட்டனர்.

"ஆமாம் டா கெட்டப் தான் டா அதுக்கு என்னடா இப்போ " என்று கேட்டார் சாமியார் என்ற போலீஸ்.

அவர்களால் அதை நம்பவே முடியவில்லை. "அப்புறம் நீங்க சொன்னதுலாம் எப்படி கரெக்டா நடந்திச்சி நீங்க இங்க இருந்து நிருந்த்துங்கனு சொன்னது எங்களுக்கு எப்படி எவ்வளவு தெளிவா கேட்டிச்சி " என்று அரவிந்த் கேட்டான்.

"தம்பி இங்க பாரு மொத்தம் இந்த ஏரியாவுல  5ஸ்பீக்கர் செட் பண்ணி வச்சிருக்கோம். எங்ககிட்ட இருக்குற இந்த மைக் வச்சி பேசுனா எவ்வளவு வேகமா போற வண்டிக்கும்  தெளிவாக கேட்கும்." என்று மைக்கை காட்டிக்கொண்டே சொன்னார் சாமியார் என்ற போலீஸ்.

எல்லோருடைய கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தது.

"அப்போ நாங்க வந்த வேகத்த எப்படி கரக்டா சொன்னீங்க" என்று அருண் விழியை பெரிதாக்கி கேட்டான்.

"போலீஸ்காரன் கிட்ட  ஸ்பீடு ட்ரேஸ் பண்ற மெசின் கூடவா இருக்காது?" என்று சாமியார் வினாவோடு பதில் அளித்தார்.

"அப்போ கரெக்டா விபத்து நடக்கும்னு சொன்னது இரத்தாதாலாயே வண்டி நிரம்பும்னு சொன்னது" என்று ஆச்சரிய கேள்விகளைஅடுக்கினாள் ஹேமா.

"இது என்னடா சின்ன புள்ள தனமான கேள்வியா இருக்கு" என்று சாமியார் சலித்துக்கொண்டே பதில் அளித்தார்.

"ஸ்பீடா போனா விபத்து நடக்கும்மென்ற  அறிவு கூடவா  இல்லாமையா  இருப்பீங்க?" .

"அதுவும் நீங்க போன அளவுக்கு ஸ்பீடா கார் போய் விபத்து நடந்தா இரத்தம் வராம காவிரி தண்ணீரா வரும்" என்று திட்டினார் சாமியார் என்ற போலிஸ்.

"போங்க போங்க போய் இதுக்கு மேலையாவது பார்த்து பத்தரமா ஓட்டுங்க" என்று அறிவுரை சொன்னார்.

இதற்கு மேல் அவர்களால் எதுவும் பேச முடியவில்லை எதுவும் கேட்க முடியவில்லை.

எல்லோரும் ஊமையை போல் மௌனமாய் அந்த இடத்தை விட்டு மெதுவாக அவர்களுடைய காரை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்..

ஆனால் அவர்களுடைய மனசாட்சி மட்டும் புலம்பிக்கொண்டே வந்தது.

"எவ்வளவு ட்ரிக்சா வேல பார்க்குரானுங்க" என்று.....



Thursday, 5 November 2015

சுமையில் சுகம்....(சிறுகதை)


"ஏ  வேலு ..!!! வண்டில ஏத்துன சிமெண்ட் மூட்டையலாம் இந்த விலாசத்தில போய் இறக்கிட்டு வந்துடு" என்று விலாசம் எழுதிய தாளை சுப்பிரமணி வேலுவிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்...


அந்த விலாசத்தை பிரித்து பார்த்ததும் அது தன் வீட்டருகே உள்ள விலாசம் என்று தெரிந்ததும் தன்னுடைய மீன்பாடி வண்டியை தள்ளிக்கொண்டு  கொஞ்சம் உற்சாகத்துடன் சிமெண்ட் கம்பெனில இருந்து புறப்பட்டான்.

தான் போகும் வழியில் தான் தன்னுடைய மகள் செல்வி படிக்கும் பள்ளி இருப்பதாலும் அதே நேரத்தில் பள்ளி விடும் நேரம் நெருங்கி விட்டதாலும் அவளையும் தன்னுடன் வீட்டுக்கு அழைத்து போகலாம் என்று முடிவு செய்து பள்ளிக்கு சென்று அங்கே வெளியே காத்துக் கொண்டிருந்தான்.

வேலு மகள் செல்வி அங்கே இருக்கும்  மாநகராட்சி பள்ளியில் முதலாம்  வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அவளை சேர்த்த முதல் மாதம் மட்டும் அவளை பள்ளிக்கு விட்டு அழைத்து வந்தார்கள். அதன் பின் அவள் வீட்டருகே அருகே பள்ளிக்கு போகும் மாணவர்களோடு போய் வர பழகிக் கொண்டாள்..

செல்வி பள்ளி விட்டு வெளியே வந்தாள்.
அப்போது ஓரமாய் இருந்த வேலு  "அம்மா செல்வி .... அம்மா செல்வி " என்று கூப்பிட்டான்.

செல்வி திரும்பி பார்த்ததும் தன் தந்தை அங்கே நின்று கொண்டிருப்பது தெரிந்ததும் "அப்பா" என மகிழ்ச்சியில் கத்திக்கொண்டே தாவி குதித்து ஓடி வந்து வேலுவின் கழுத்தை இறுக கட்டிக்கொண்டாள்.

தன் மகளை சிமெண்ட் மூட்டையில் மீது ஒரு துணியை போட்டு அதன் மீது  அமரவைத்தான். "அம்மு குட்டி  போலாமா " என்று செல்லமாய் கேட்டான்.

"போலாம் பா " என்று என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்...

பள்ளியில் விளையாடிய விளையாட்டை தன் தந்தையிடம் விவரித்துக்கொண்டே வந்தாள் . வேலுவும் ஒ அப்படியா..!!! அப்புறம் நடந்தது யாரு ஜெயிச்சீங்க என்று தன் மகளிடம் சந்தோசத்தோடு பேசிக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.

அப்போது ஒரு மேம்பாலம் குறுக்கிட்டது.

அவர்கள் வீட்டுக்கு சென்றடைய அந்த மேம்பாலத்தை அவர்கள் கடந்தாக வேண்டும். அவன் வண்டியிலிருந்து இறங்கி அந்த வண்டியை மேம்பாலத்தில் தள்ளிக்கொண்டு ஏற்றினான்.

மேம்பாலம் கொஞ்சம் உயரமாக இருந்ததால் வேலு மிகவும் கஷ்டப்பட்டு வண்டியை இழுத்துக்கொண்டு ஏற்றிக்கொண்டிருந்தான்.

இவ்வளவு நேரம் பேசிக்கொண்டே வந்த தந்தை திடிரென்று பேசாமல் இருந்ததை பார்த்து அவரை உற்று நோக்கினாள் செல்வி. வேலு முகம் முழுவதும் வியர்வையால் நனைந்து கொண்டிருந்தது. மூச்சியும் அதிகமாய் வாங்கி கொண்டிருந்தது.

இதை பார்த்த செல்விக்கு என்ன  செய்வதென்றே தெரியவில்லை. ஏதோ ஒன்று நினைத்தவளாய் திடிரென்று எழுந்து தன்னுடைய புத்தகப்பையை தலை மேல் வைத்துக்கொண்டு ஒற்றைக்காலில் நின்றாள்.

இதை பார்த்த வேலுக்கு ஒன்றுமே புரியவில்லை. வண்டியுடைய பிரேக்கை பிடித்துக்கொண்டு "என்னமா ஆச்சு?" என்று பதறியபடி கேட்டான்.

அதற்க்கு செல்வி  "ஒன்னும் இல்லபா ஏற்கனவே வண்டி ரொம்ப பாரமா இருக்கு. அது பத்தமா நானும் என்னுடைய பையும் பாரமா இருக்கும்ல. அதான் பையை தூக்கி என் தலைமேல வச்சிகினா உங்களுக்கு எடை கம்மியா இருக்கும் அது போல ஒத்த கால்ல நின்னா பாதி எடை கொரைஞ்சிடும்ல. அப்புறம் நீங்க சுலபமாய் வண்டியை தள்ளலாம்ல" அப்பாவியாய் தன் மழலை குரலில் வேலுவிடம் சொன்னாள் ...

இதைகேட்ட வேலுவுக்கு மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் லேசாக வந்தது.

அதை துடைத்து கொண்டே  "அப்படியா சொல்ற அப்போ நீ சொல்றது சரியாதான் இருக்கும். ஆனா நீ ஒத்த காலில் நிற்க வேணாம், நீ உட்கார்ந்து கொண்டே பையை மடிமேல வச்சிக்கோ! அப்பவும் நீதானே எடையை தூக்கினு இருக்க.. அப்படி செஞ்சா வண்டி தானா கஷ்டப்படாம போய்டும் " என்று மகளிடம் சொன்னான்.

அவளும் அதை ஆமோதித்து வேலு சொல் படியே நடந்தாள்.

தன் மகளுக்கு தான் கஷ்டப்படுவது தெரிய கூடாது என்று "அப்புறம் உங்க விளையாட்டுல என்னமா நடந்தது ? யாரு ஜெயித்தது என்று அப்பாகிட்ட சொல்லவே இல்லையே " என்று கேட்டான்.
"ஓ சொல்லலையா சரி சரி சொல்றேன் " என்று தான் விளையாடிய விளையாட்டை தொடர்ந்து விவரிக்க ஆரம்பித்து விட்டாள் செல்வி.

மறுபடியும் அப்பாவும் மகளும் ஜாலியாய் பேசிக்கொண்டே தன் வேதனையை  வேலு முகத்தில் மட்டும் காட்டாமல் அந்த மேம்பாலத்தை மெதுவாய் ஏறி முடித்தான்...

Monday, 2 November 2015

ஐந்து வாக்கியங்கள் வெவ்வேறு அர்த்தங்கள்.

ஐந்து வாக்கியங்கள் வெவ்வேறு அர்த்தங்கள்.

1)
நான் என்ற வார்த்தை
சில நேரங்களில்
தன்னம்பிக்கையையும்
பல நேரங்களில்
அகங்காரத்தையும் வளர்க்கிறது...!!!

2)
உன் கஷ்டத்தை
காது கொடுத்து கேட்க பலர்
தயாராக உள்ளனர்
அது உன் பிரச்சனையை
தீர்க்க அல்ல
அதை கேட்டு அவர்கள் ஆனந்தப்பட...!!!

3)
நல்லது செய்யும் போது
வரும் தடங்கல்
கெட்டது செய்யும் போது
வருவதில்லை...!!!

4)
பணம் மட்டுமே
நண்பனையும் பகைவனையும்
ஒரே நேரத்தில் உருவாக்கும் ...!!

5)
பேருந்து பயணத்தில்
முடியாதவர்களுக்கு
இருக்கை கொடுக்க
நம் மனம்
மட்டுமே எழுகிறது...!!!


------------------------------------------------------------------

உன்னை பற்றி
ஒருவரும் 
ஒரு குறையும் 
சொல்லவில்லை என்றால் 
நீ தவறான 
இடத்தில் இருக்கிறாய் 
என்பதை புரிந்து கொள்...!!!

Wednesday, 30 September 2015

மகள் ஒரு அழகான உணர்வு...!!!























ஆயிரம் சோர்வுடன்
இருந்தாலும் அதை
அழகாய் போக்கும்
திறமை அவளிடம் மட்டுமே
உள்ளது...!!

Monday, 28 September 2015

யார் உன் நண்பன்?

உன்னிடம் 
கையிலும் பையிலும்
காசு கூட இல்லாமல் 
எவன் ஒருவனிடம் சேர்ந்து 
உன்னால் எந்த வித
தடு மாற்றமில்லாமல்
வெளியில் செல்ல முடிகின்றதோ 
அவனே உன் நண்பன்..!!!


மச்சி களம்பி வீட்டுக்கு வாடா.. 
என்று சொன்னவுடன் ஏன் 
என்று ஒரு வார்த்தைக் கூட கேட்காமல் 
ஒருவன் அடுத்த நிமிடமே 
உன் வீட்டுக்கு வந்தால் 
அவனே உன் நண்பன்....!!!!

நீ செய்யும் தவறை 
சரியான நேரத்தில் சுட்டிக்காட்டி 
அதை - சரி செய்ய 
உனக்கு உதவி 
புரிகிறான் என்றால் 
அவனே உன் நண்பன்...!!!

சந்தோசத்தை 
ஆயிரம் நபரிடம் 
பகிர்ந்து கொண்டாலும் 
சோகம் என்று வரும்போது
யாருடைய ஞாபகம் 
உனக்கு உடனே வருகிறதோ 
அவனே உன் நண்பன்...!!!

நகைச்சுவையான 
தருணங்களை தவிர 
மற்ற நேரங்களில் யார் 
ஒருவனிடம் உண்மையை மட்டும் 
பேசுகிறாயோ 
அவனே உன் நண்பன்...!!!

Friday, 18 September 2015

வீரப் பெண்மணி (கவிதை)


1) ஜாக்கிரதை.

 அவளை
தொட நினைப்பவர்களுக்கு
நினைவிருக்கட்டும்
துப்பட்டாவும் வாளாக மாறும் என..!!!!

2) பார்வையின் சக்தி..!!!!

உன்னை தொட்டுவிட
நினைத்த சூரியனை 
உன் கண் பார்வையால் 
சுட்டு விட்டாயோ 
இப்படி மேக கூட்டத்திற்குள் 
ஓடி ஒளிந்துக்கொண்டதே...!!!


3) அவளின் வருகை

தென்றலில் புயல் 
கடந்தது சென்றது
போல் இருந்தது 
அவளின் வருகை...!!


Thursday, 10 September 2015

இருளில் வெளிச்சம் (சிறுகதை).


வளர்மதியின் தொந்தரவு தாளாமல் வாணி "சரி வா கார் ஓட்ட சொல்லி தரேன் என" அந்த பரந்த பெரிய மைதானத்துக்கு மாலை 6.00 மணியளவில் கூட்டிக்கொண்டு வந்தாள். அந்த மைதானத்தை சுற்றி வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் தான் இருந்தது. மைதானத்தின் நடுவே 8 நபர்கள் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தது போல தெரிந்தது. இவர்கள் அந்த மைதானத்தை சுற்றி கார் ஓட்டும் பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

அவர்களை தவிர மேலும் இரண்டு பேரும் கார் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். நேரம் ஆக ஆக இருள் வெளிச்சத்தை விழுங்கிக் கொண்டிருந்தது. கார் ஓட்டும் ஆர்வத்தில் அந்த இரண்டு காரும் அவர்களுடைய பயிற்சியை முடித்து கொண்டு கிலம்பியதை வாணியும் வளர்மதியும் கவனிக்கவில்லை.

அவர்கள் கார் ஓட்டும் சந்தோசத்திலிருந்து வெளியே வந்து பார்க்கும் போது நேரம் சரியாக 7.15 ஆக இருந்தது. அப்போது அந்த மைதானத்தை சுற்றி இருள் மட்டும் தான் இருந்தது. இவர்களின் கார் வெளிச்சமும் அந்த நபர்கள் வேலை செய்யும் அருகே ஒரு சின்ன விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்தது.

வாணிக்கு லேசாக பயம் வந்தது. "வளர்மதி! ரொம்ப இருட்டா இருக்கு. இங்க இருக்கறது எனக்கு சரியாய் படல  இப்போ போயிட்டு வேற ஒரு நாள் வரலாம் " என்று வாணி சொன்னாள்.

வளர்மதி ஓட்டும் ஆர்வத்தில் இருந்ததால் "அக்கா இன்னும் கொஞ்சம் நேரம் ஓட்டலாம் ப்ளீஸ் கா ப்ளீஸ் கா ப்ளீஸ் கா" என்றாள் வளர்மதி. வாணியால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. சரி என்று சொன்னாள்.

வெளிச்சத்தில் பார்த்த அந்த நபர்களை இருட்டில் பார்க்கும் போது வாணிக்கு பயம் சிறிது சிறிதாக அதிகரித்தது. அந்த நபர்களை சுற்றி பெரிய வட்டமிட்டு கார் பயிற்சி செய்து கொண்டிருந்தாள் வளர்மதி. வாணிக்கு பயம் இருந்தததால் அவர்களுடைய நடவடிக்கையை நிமிடத்திற்கு 3 முறை கண்காணித்துக்கொண்டே இருந்தாள்.

மணி 7.35 ஆனது. அப்போது இவர்களுடைய காரை காட்டி ஒருவன் ஏதோ ஒன்று பக்கத்தில் இருப்பவனிடம் சொன்னான். அதை தூரத்தில் இருந்து வாணி பார்த்து விட்டாள். அதை வளர்மதியிடம் வாணி சொல்ல. அப்பொழுது தான் ஆபத்தில் இருக்கிறமோ என்ற பயம் வளர்மதிக்கு வர ஆரம்பித்தது.

அந்த குழுவிலிருந்த இரண்டு பேர்  இவர்களின் காரை நோக்கி வேகமாய் நடந்துவந்தார்கள்.அவர்கள்  இவர்களை பார்த்து தான் வருவதைவாணியும் வளர்மதியும் உணர்ந்து விட்டனர்.  அந்த இரண்டு பேரில் ஒருவன் லுங்கியை கட்டிக்கொண்டு பெரியதாக தாடி வளர்த்திருந்தான். இன்னொருவன் பேன்ட் சட்டை போட்டுக்கொண்டு நட்டு போல்டு உடைய காது குத்திகொண்டு  இருந்தான்..

அவர்கள் இவர்களுடைய காரை நோக்கி நிறுத்து நிறுத்து என்று சொல்லிக்கொண்டே வேகமாய் வந்தார்கள்... "வளர்மதி !!! இப்போது நீதான் டிரைவர் சீட்ல இருக்க இப்போ நாம மாறி உட்கார்வதற்குள் நம்மள அவங்க பிடிச்சிடுவாங்க .. அதனால் நீயே காரை ஒட்டு. " என வாணி கட்டளை இட்டாள்.

என்ன பன்றதுனே தெரியாம சரி என்று ஒப்புக்கொண்டாள்.
அவர்கள் கிட்ட நெருங்க நெருங்க வளர்மதி காரை விர்ர்ரென்று கலப்பிக்கொண்டு காரை கலப்பினாள். இவர்கள் கார் கலம்புவதை கவனித்த அந்த இரண்டு நபர்கள் ஏய் ..!!! நிறுத்து ..நிறுத்து .. என்று கத்தினார்கள்.


அந்த கார் இவர்கள் குரலுக்கு நிற்காது என்று தெரிந்த கொண்ட பின் "டேய் மச்சி இந்த கார் நிக்க மாட்டுதுடா வாங்கடா " என்ற பெரியதாக கத்தினான்.

வளர்மதி புதியதாய் ஒட்டுவதால் கார் அந்த பக்கமும் இந்த பக்கமும் வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது.

வளர்மதிக்கு பதட்டத்தில் என்ன செய்வதன்றே தெரியாமல் அங்க இருந்த மண் உள்ள பள்ளத்தில் வண்டியை செலுத்தும் போது அதில் இரண்டு சக்கரங்களும் மாட்டிக்கொண்டது. "ஏய் என்னடி பண்ற ஒட்டு டி ஒட்டு டி என்று அலறினாள் " வாணி.

" மச்சி வண்டி மாட்டிகிச்சி இப்ப புடிச்சிடலாம். வாங்க டா " என்று அவர்களுடைய கூட்டாளிகளை கூப்பிட்டான். இவர்கள் இருவரும் அந்த காரை நோக்கி வேகமாய் ஓடினர்.

அவனுடைய கூட்டாளியின் குரலை கேட்ட அடுத்த நொடியே மீதி இருந்தா ஆறு பெரும் மூன்று மோட்டார் பைக்கை கலப்பினார்கள். வாணி கதற ஆரம்பித்து விட்டாள் "ஏய் அவுங்க நம்மள நோக்கி பைக்ல வராங்காடி வண்டி ஸ்டார்ட் பண்ணு டி ஸ்டார்ட் பண்ணுடி என்று கத்தினாள் ".

வண்டி பள்ளத்தில் மாட்டிக்கொண்டதால் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை அதிலிருந்து எப்படி எடுப்பதென்று கூட தெரியமால் என்னென்னவோ வளர்மதி செய்து கொண்டிருந்தாள். போலிசை உதவிக்கு அழைக்கலாம் என்று அவளுடைய மொபைலை  வாணி எடுத்தாள். வாணி பதட்டத்தின் உச்சியில் இருந்ததால் அவளுடைய கைகள் நடுங்கியது. அந்த நடுக்கத்தில் கையில் இருந்த மொபைல் போன் தவறி கீழே விழுந்து சீட்டுக்கு அடியில் சென்று விட்டது.

அதை எடுப்பதற்குள் இவர்களை நோக்கி அந்த இரண்டு பேரும் ஓடி வந்து இவர்களின் கார் முன்னே நின்றார்கள். பைக்கில் வந்த கூட்டாளிகளும் இவர்களுடைய காரை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள்.

வாணியும் வளர்மதியும் பயத்தின் உச்சியில் இருந்ததால் அவர்கள் வியர்வையிலேயே குளித்து விட்டனர்.. அந்த சிறிய நேரத்திற்குள் இந்த உலகத்தில் நடந்த அத்தனை பலாத்கார நிகழ்வுகளின் பத்திரிக்கை செய்திகளும் அவர்கள் கண் முன்னே வந்து சென்று விட்டது.

அந்த இருவர் வளர்மதியின் கார் ஜன்னல்அருகே நெருங்கினார்கள்.
வாணியும் வளர்மதியும் பயத்தில் அவர்களுடைய எச்சிலை விழுங்கிக்கொண்டு நம்மள என்ன செய்ய போறானோ என் அவனையே பார்த்தார்கள்.

லுங்கி கட்டியவன் அவர்களிடம் கிட்ட நெருங்கி "ஏம்மா......!!! அங்க சிமெண்ட்ல கிரிக்கெட் விளையாட பிட்ச் போட்டிருக்கோம் அதன் மேல ஏத்திடாதீங்கனு சொல்ல வந்தா இப்படி நிற்காமலே ஒட்டினு வந்து பள்ளத்தில சிக்கிக்கிட்டீங்களே " என்று அப்பாவியாய் பேசினான்.

"சரி காரி தள்ளி விடுங்கடா" என்று அவன் அவர்களுடைய கூட்டாளிகளிடம் சொன்னான்.

மீதி ஆறு பேரும் கார் பின்புறம் போய் காரை தள்ளி விட வாணியின், வளர்மதியின் பயமும் பள்ளத்திலிருந்த காரும் ஒரே நேரத்தில் விடு பட ஆரம்பித்தது....!!!!


Thursday, 3 September 2015

அவள் (கவிதை )....


உன்னை பற்றி கவிதை எழுத துடிக்குதடி மனது
ஆனால் உன் நினைப்பு அடிக்கடி வந்து தடுக்குதடி..

சில நிமிடங்கள் உன்னை நினைத்துவிட்டு
எழுதலாம் என்று நினைத்தேனடி - ஆனால்
என் மொத்த நிமிடத்தையும்
உன் நினைவுகள் ஆட்கொண்டதடி....!!!

உன்னை தூரத்தில் தான்  பார்த்தேனடி
பார்த்தவுடன் பட்டென்று மனதுக்குள் ஒட்டிக்கொண்டாயடி.

உன் மேல் எனக்கு வந்த காதல் வாழ்க்கையின்
ஒரு அங்கம் தான் என்று நினைத்தேனடி - ஆனால்
நீதான் என் வாழ்க்கையே ஆகிவிட்டாயடி.

உன் முக அழகை என் பர்ஸுக்குள் வைத்தேனடி
உன் அக அழகை என் மனதுக்குள் வைத்தேனடி.

என்னை காணாமல் நீ அழும் போது ஒரு சிறு குழந்தை போல ஆனாயடி..!!
நான் தோல்விகளில் துவளும் போது சோதனைகளை கடக்க கற்று தந்தாயடி.

உன் வீரத்தை பார்த்து அப்போது வியந்தேனடி..
உன்னை குழந்தை என்று நினைத்த என்னை நினைத்து வருந்தினேனடி....!!!!

உன் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ஒன்றாக ஆனதடி
இந்த இனிமையான வாழ்க்கை என்றுமே நிலைக்கட்டுமடி....!!!!


Tuesday, 25 August 2015

போலிஸ்காரர் (சிறுகதை)

சுந்தர் தள்ளு வண்டியில் காலை உணவும் மதிய உணவும் தினமும் விற்று வந்தான் அதனருகில் ஒரு சிக்னல் இருந்தது அதில் கனகசுந்தரம் என்ற போக்குரவரத்து காவலர் வேலை செய்து வந்தார்.

கனகசுந்தரம் சிக்னலில் வேலை செய்யும் போது அவ்வளவு சந்தோசத்துடனும் பெருமையுடனும் காலை முதல் மாலை வரை உற்சாகம் குறையாமல் பணியாற்றுவார். அதை சுந்தர் பலமாதங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறான். சில நேரங்களில் அவரை பற்றி "இவர் பெரிய IPS அதிகாரி போல ஓவரா வேலை செய்ராரே" என்று தன் நண்பர்களிடம் கேலியாக பேசுவான்.


ஆனால் இன்று காலையிலிருந்து கனகசுந்தரம் மிகுந்த வருத்ததுடனும் சோகத்துடனும் வேலை செய்து கொண்டிருந்தார். அதை பார்த்த சுந்தருக்கு வியப்பாக இருந்தது. இவர் இப்படி இருந்து அவன் பார்த்ததே இல்லை.

அவனுக்கு அந்த ஆச்சர்யம் தீரவே இல்லை. அவரிடமே கேட்டுவிட வேண்டுமென்று முடிவு செய்து விட்டான். அவரிடம் கேட்பதற்கு தயக்கமாகவும் இருந்தது ஆனாலும் காரணத்தை தெரிஞ்சிக்க மனமும் துடித்தது.

எப்படியும் நம்ம ஹோட்டலுக்கு (தள்ளு வண்டி கடை) தான் சாப்பிட வருவார் அப்பொழுது கேட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்தான். அவரும் சாப்பிட வழக்கத்தை விட கொஞ்சம் தாமதமாக தான் வந்தார். அவருக்கு சுந்தர் உணவு பரிமாறினான். அவர் சரியாக சாப்பிடாமல் கடமைக்கு சாப்பிட்டு விட்டு கையை  கழுவி கொண்டு உணவுக்கான காசை கட்டிவிட்டு  மறுபடியும் கடமையாற்ற செல்ல தயாரானார்.

"சார் ஒரு நிமிஷம்" என்றான் சுந்தர்.

அவரின் அருகே சுந்தர் சென்று தாழ்வான குரலில் "சார் நீங்க இவ்வளவு  சோகமாய் இருந்து நான் பார்த்ததே இல்லை நீங்க ஏன் இவ்வளவு  சோகமா  இருக்கீங்க என்ன காரணம் என நான் தேரிஞ்சிக்கிலாமா" என கேட்டான்.

கனகசுந்தரம் சிறிது நேரம் யோசித்துவிட்டு ஒரு வாட்ஸப் வீடியோ ஒன்றை சுந்தருக்கு காட்டினர் அந்த வீடியோவில் ஒரு போலிஸ்காரர் சிறுநீரை பொது இடத்தில் கழிப்பது போல் அந்த வீடியோ இருந்தது. அந்த வீடியோ சிறுநீர் கழித்த போலீசையும் ஒரு நாயையும் ஒப்புமைபடுத்தியது போல கேலியோடு இருந்தது. அந்த விடியோவைப் பார்க்கும் போது சுந்தருக்கு அடக்க முடியாத அளவு சிரிப்பு வந்து விட்டது.

இருந்தாலும் அவன் சிரிப்பை அடக்கிக்கொண்டு "இது போல் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது தவறு தானே சார் " என்று சுந்தர் கேட்டான்.

கனகசுந்தரம் அவனிடம் மெதுவாக பேச ஆரம்பித்தார்.

"தவறு தான் நான் இல்லை என்று சொல்லவில்லை சுந்தரம்.. ஆனால் எங்கள் வேலை பற்றி வீடியோ எடுத்தவர்கள் மறந்துவிட்டனர் என்று நினைக்கும்போது  தான் வேதனையாக உள்ளது.

எங்கள் வேலையில் நாங்கள் எப்போதும் பொது இடத்தில் தான் வேலை செய்ய வேண்டும். பாதிக்கு பாதி இடங்களில் இயற்கை உபாதையை கழிக்க கூட இடம் இருக்காது.

பல நேரங்களில் காலையில் வருவதாய் சொன்ன முக்கிய பிரமுகர் மாலையில் தான் வருவார். அதனிடையே போக்குவரத்து நெரிசல் ஆகாமல் நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நாங்கள் இந்த பக்கம் அந்த பக்கம் எங்கும் நகர கூட முடியாது. அந்த இடத்தில் எது நடந்தாலும் எங்களை திட்டுவதற்கு என்றே ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது எங்கள் மேலதிகரிகள் உட்பட.

இந்த வீடியோவில் இருந்த போலிசை பற்றி எனக்கு தெரியாது ஆனால் அவர் வேலை செய்த இடத்தை பற்றியும் அப்போது அவர் இருந்த சூழ்நிலை பற்றியும் எனக்கு நன்கு தெரியும். அந்த சிக்னலை சுற்றி சில கிலோமீட்டருக்கு எந்த கழிவறையுமே இருக்காது. அப்போது காலை வருவதாய் சொன்ன ஒரு முக்கிய பிரமுகர் இதோ கலம்பிட்டோம் அதோ கலம்பிட்டோம் என்று சொல்லி 5 மணி நேரமாகியும் அவர் வரவில்லை.

அவரால் இயற்கை உபாதையை ஒரு கட்டத்தில் கட்டுபடுத்த முடியாமல் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் சிறுநீர் கழிக்கும் போது அதை வீடியோ எடுத்து விட்டனர். அதை எடுத்ததும் இல்லாமல் நாயுடன் சம்பந்தம் படுத்தி போட்டுள்ளனர். இது அவரை அவமானப்படுத்தியது போல தெரியவில்லை எங்கள் எல்லோரையும் அவமானப்படுத்தியது போல இருந்தது. எங்களுடைய கஷ்டம் பொதுமக்களுக்கு தெரியலைனா கூட பரவாயில்லை சுந்தரம் எங்க மேல் அதிகாரிகளுக்கு கூட தெரிய மாட்டுது  என்று அவருடைய வேதனையை வெளிப்படுத்தினார்.

 சரி சுந்தரம் நான் கலம்புறேன் என்று சொல்லி சிக்னலில் வேலை செய்ய மெதுவாக நடந்து சென்றார்.

சுந்தர் அவனை அறியாமலேயே அவருக்கு ஒரு சல்யூட் அடித்தான் ... சுந்தரத்திற்கு தானாகவே கனகசுந்தரத்தின் மேலும் போலிஸ் மேலும் ஒரு மரியாதை வந்தது...!!!!

Thursday, 20 August 2015

தொலைபேசியில் ஒரு காதல் (சிறுகதை)

ஜானகி வழக்கத்தை விட அன்று மிகவும் படபடப்பாக இருந்தாள். அதற்கு காரணம் அவளுடைய காதலனை அவள் பார்க்க போகிறாள் என்பது தான்...

ஜானகியும் ரமேஷும் ஒரு தவறான அழைப்பில் அறிமுகமாகி அவர்கள் நட்பை தொடர்ந்தனர். அந்த நட்பு ஒரு கட்டத்திற்கு மேல் காதலாய் கனிந்தது ...

ஜானகி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்க மாட்டாள். அதற்காக அவள் ஏகப்பட்ட அவமானங்களை மற்றவர்களின் கேலி கிண்டல் மூலமாய் சந்தித்தவள் . அதனால் யாரிடமும் அதிகமாக பேச மாட்டாள்..
ரமேஷின் அந்த தொலைபேசி அழைப்பு தான் அவளுடைய வாழ்க்கையை சந்தோசமாய் மாற்றியது. அவனோட பேசும் ஒவ்வொரு நொடியும் அவளுக்கு அளவிட முடியாத அளவுக்கு சந்தோசத்தை வாரி வழங்கியது. ஆனால்
அது இன்றோடு முடிய போகிறது என்று மிகவும் பயத்தோடு இருந்தாள்.

ஏற்கனவே ஒரு முறை இருவரும் நேரில் பார்க்கலாம் என்று முடிவு செய்தார்கள். அப்போது ஜானகி மட்டும் ரமேஷை தூரத்தில் இருந்து பார்த்து விட்டாள். அவனுடைய அழகும் வசதியும் தூரத்தில் இருந்து  பார்த்துவிட்டு கண்டிப்பாக இவன் நம்மை எற்றுக் கொள்ள  மாட்டான் என்று முடிவு செய்து அவனை பார்க்காமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள் . அவன் ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு அலுவலகத்தில் வேலைப்பளு என்று காரணம் சொல்லிவிட்டாள்.

அதன்பின் ஒவ்வொரு முறை அவனுடைய அழைப்பு வரும்போதுலாம் ஒருவித பதட்டத்தோடே பேசுவாள்.

ரமேஸ் இன்று உன்னை கண்டிப்பாக நான் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டான். இவளும்  ஏதோதோ காரணம் சொல்லி பார்த்தாள் .. அவன் எதையுமே ஏற்றுக்கவில்லை.

அவனும் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த பூங்காக்கு வந்து விட்டான். இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இன்றோடு நம்முடைய மொத்த மகிழ்ச்சியும் முடிய போகுது என்று பயத்தோடு கண்ணீரும் வர ஆரம்பித்துவிட்டது.

ரமேஸ் தொடர்ந்து தொலைபேசியில் அவளுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே  இருந்தான். வேறு வழியே இல்லாமல் அவனை பார்க்க அந்த பூங்காக்கு சென்றாள் .


பூங்கா வாயிலிலே ரொம்ப நேரம் யோசித்து கொண்டே இருந்தாள். இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று முடிவு செய்து ஒவ்வொரு அடியையும் ஆயிரம் யோசைனகளுடன் எடுத்து வைத்தாள்.

அவள் அவனை பின்புறம்  நெருங்குவதற்கும் ரமேஸ் அவளை தொலைபேசியில் அழைப்பதற்கும் நேரம் ஒரு சேர இருந்தது. ரமேஸ் மெதுவாக பின்புறம் திரும்பினான். இங்கே ஜானகி தான் நிற்கிறாள் என்று கண்டு பிடித்து விட்டான்.

அவளை பார்த்ததும் அவன் முகம் கோபமாய் மாறியது. அவன் அவளை கிட்ட நெருங்கி சென்றான். அவன் கிட்ட நெருங்க நெருங்க அவளுக்கு பயமும் பதற்றமும் அளவிட முடியாத அளவு அதிகரித்தது.

அவன் அவளை கிட்ட நெருங்கி முறைத்து தலையில் செல்லமாய் ஒரு சின்ன குட்டு வைத்து "உனக்காக எவ்வளவு நேரம் காத்துற்றுக்குது (காத்து கொண்டிருப்பது ) பாரு உனக்காக வாங்கி வைத்த பனியாரம் கூட ஆறி போச்சு " என்று சொன்னான்.

அவனுடைய பேச்சில் ஒரு சிறு தடுமாற்றம் கூட தெரியாததால் அவளுடைய அந்த பயம் ஆனந்த கண்ணீராய் மாறியது. அந்த கண்ணீரோட அவனோட மார்பில் முகம் புதைத்து அழுது கொண்டே சிரித்தாள்.. அவனும் இவளை பார்த்த சந்தோசத்தில் அவளுடைய முதுகை வருடிவிட்டான்.

Wednesday, 19 August 2015

நானும் எனது தேசபக்தியும்...!!!

1) எல்லையில் எனக்காக எனது இராணுவ வீரன் குண்டடி பட்டு சாகும் போது நான் வருந்தியதில்லை ஆனால் கிரிக்கெட்டில் தோற்கும் போது மட்டும் நான் வருந்தாமல் இருந்ததில்லை ...



2) எனது நாடு இவ்வளவு குப்பையாய் இருக்கிறதே என்று  கவலையுற்றேன் நான் சாப்பிட்ட சிப்ஸ் கவரை கீழே போட்டுக்கொண்டே!!!!

3) அடுத்தவர்கள் எச்சிலை ரோட்டில் துப்பும் போது கோபமுற்று இதற்குதான் என் நாடு உறுப்புட மாட்டுது என்று அவர்களை பார்த்து "சீ" என்று என் எச்சிலை துப்பினேன் அதே ரோட்டில்....!!!!

4) நான் சிக்னலில் நிற்கும் போது அடுத்தவர்கள் நிற்காமல் போகும் போது அவர்களை கண்டபடி மனதுக்குள்ளே திட்டினேன் அதே மற்றவர்கள் நிற்கும்போது நான்  நிற்காமல் சென்றால் புத்திசாலி தனம் என்று பெருமை கொண்டேன்...!!!

5) என் நாடு இலஞ்சத்தால் தான் முன்னேற மாட்டுது என்று பட்டிமன்றத்தில் ஈடு பட்டேன். ஆனால் எனக்கோ ஒரு வேலை ஆக வேண்டும் என்ற போது அது அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற சன்மானம் தான் என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்...

6) பத்திரிகை செய்திகளில் அடிப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் உதவி செய்யவில்லை என்று  அறிந்ததும் அவர்களை கண்டபடி விமர்சித்தேன் அதே என் முன்னே அடிபட்டு இருக்கும் போது மற்றவர்கள் உதவி செய்யட்டும் என்று எனக்கு நேரமாகி விட்டது என்று என் வேலையை தொடர்ந்தேன்...!!!

7) குறிப்பிட்ட சினிமா நடிகர் நடித்த படத்திற்கு டிக்கெட் எடுக்கவும் படம் பார்க்கவும் ஒரு நாள் முழுவதும் வீணடித்து பெருமைக்கொண்டேன். ஆனால் ஓட்டுப்போட அரை மணி நேரம் செலவழிக்க ஆயிரம் முறை யோசித்தேன்...

8) பேஸ்புக்கில் வரும் இந்தியாவின் பெருமைகளை லைக்சும் (likes) ஷேரும் (Share)  செய்து என்  தேசபக்தியை வெளிபடுத்தி கொண்டேன்.

 இது போல் ஆயிரமாயிரம் உதாரணங்களை சொல்லிக்கொண்டே இருந்தேன் ஆனால் ஒன்றை கூட திருத்திக்கொள்ளாமல்
அடுத்தவர்களை விமர்சித்தே என் தேசபக்தியை முடித்துக்கொண்டேன்.....!!!

Tuesday, 18 August 2015

அதி வேகம் ஆபத்தை .தரும்...!!! (சிறுகதை)


ராமுவும் ராஜுவும் அருகருகே குடி இருக்கும் வாலிபர்கள்... இவர்கள் இருவருக்குமே எப்போதுமே ஆகாது.... இருவருமே ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள்...

ராமு படிப்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவன். ஆனால் ராஜு அதற்கு நேர் மாறானவன். எப்போதுமே சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பவன்.

ராமுவுக்கு பைக் ரேஸ் ஓட்டுவதில் அலாதிப்பிரியம் உண்டு. அதனால் ஒரு 300 CC  பைக்கை வாங்கினான். எப்போதுமே வேகமாக பைக்கை ஒட்டுவான்... என்னதான் ராஜு ஒழுக்கம் இல்லாதவனாக இருந்தாலும் பைக்கை மிதமான வேகத்தில் தான் ஒட்டுவான்.   ஏனென்றால் வேகமாக ஓட்டினால் அடுத்தவர்களுடன் சேர்ந்து நம் உயிரும் பிரிந்து விடும் என்று தெளிவாய் அறிந்திருந்தான்.


ஒரு நாள் கல்லூரி முடிந்ததும் ராஜு முன்னாடியே வீட்டுக்கு கிளம்பி அவனுடைய வண்டியில் மித வேகத்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது ராமு அவனுடைய ரேஸ் பைக்கில் வேகமாக பின்னாடி வந்து " நான் ஒரு 10 நிமிசத்துல வீட்டுக்கு போய்டுவேன் நீ ஒரு பத்து நாளுக்குள்ளவாது வீட்டுக்கு வந்துடு" என்று  கிண்டல் செய்து அவனுடைய வண்டியை மின்னல் வேகத்தில் செலுத்தினான்.

ராஜு வண்டியில் செல்லும் போது அவனுடைய கவனத்தை சிதற விடமாட்டான். அதனால் ராமுவின் கேலி அவனை பெரிதாய் பாதிக்கவில்லை. அவன் பயணம் வீட்டை நோக்கி மித வேகத்தில் தொடர்ந்து கொண்டிருந்தது.

ராஜு சில கிலோ மீட்டர் பயணம் செய்த பின் ஒரு விபத்தை பார்க்கிறான். அநேகமாக எதோ பைக் விபத்து போல தெரிகிறதே என்று கிட்ட நெருங்கி பார்த்த பின் தான் அவனுக்கு தெரிகிறது அது ராமுவின் வண்டி.

விசாரித்து பார்த்ததில் ராமுவின் வண்டி வேகமாக வந்ததில் கட்டுப் பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த லாரி மேல் மோதியது என்று.

உடனே ராஜுஆம்புலன்சை தொலைபேசியில் அழைத்து அருகே இருந்த  மருத்துவமனைக்கு கொண்டு சென்றான். அதே சமயம் அவர்களின் வீட்டுக்கும் தகவல் அனுப்பினான் .. பலமணி நேரம் தீவிர சிகிச்சைக்கு அப்புறம் ராமு பிழைத்து கொண்டதாய் மருத்துவர் அவர்களின் தாய் தந்தைக்கு தகவல் தெரிவிக்கிறார். ஆனால்  சில நாட்கள் ராமு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டுமென்று தகவல் தெரிவிக்கிறார்.

ராமுவின் தாயும் தந்தையும் கண்ணீர் மல்க ராஜுவுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

ராமு அன்றைக்கே அவசர பிரிவில் இருந்து சாதாரண பிரிவிற்கு கொண்டு வந்தார்கள்.

ராஜு ராமுவை பார்க்க செல்கிறான். ராமு மெதுவாய் கண்களை திறந்து ராஜுவை  பார்க்கிறான். அப்பொழுது ராஜு ராம் அருகே சென்று மிகவும் மெல்லிய குரலில் "நான் இன்னும் 10 நிமிசத்துல வீட்டுக்கு போய்டுவேன் நீதான் வீட்டுக்கு வர 10 நாட்களாகும்" என்று சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்கிறான்.

ராமுவின் கண்கள் ராஜுவுக்கு நன்றி சொல்லியும் தான் செய்த தவறை எண்ணியும் கண்ணீரை வெளி கொண்டு வந்தது.

Thursday, 13 August 2015

தோல்வியின் மருந்துகள் ...!!!!

1)
நீ
ஒப்புக் கொள்கிறாயோ
இல்லையோ - உன்
வெற்றிக்கு
பல பேர்
காரணமாக இருக்கலாம்
உன் தோல்விக்கு
நீ மட்டுமே காரணம்...!!!!!

2)
வெற்றி
என்பது
ஒருமுறை
செய்த தவறை
மறுபடியும்
செய்யாமல் இருப்பது தான்...!!!!

3)
தோற்பதில்
பெருமை கொள்
ஒரு
புது வழியை
கண்டு பிடித்திருக்கிறேன்
என்று..!!!!