Wednesday, 13 January 2016

வெற்றிக்காக ஒரு போராட்டம் (சிறுகதை)


 "இதுதான் உன் வாழ்க்கையின் கடைசி ரேஸ் நீ  இதுல ஜெயிச்சே  ஆகணும் இல்லேன்னா நீ இந்த உலகுத்துல உயிர் வாழ்வதே வீண் தான்.

இதுவரை பட்ட அவமானங்களுக்கு நீ பதில் சொல்லும் நேரம் இது தான். உன் இரத்தத்தின் கடைசி துளி கீழே விழும் வரை நீ போராடி ஜெயிச்சாகனும்" என்று ராஜாவின் மனசாட்சி அவனிடம் பேசிக்கொண்டே இருந்தது.


பந்தயத்தில்  ஓட அனைவரும் (மொத்தம் 7 பேர்) தயாராக ஒரே நேர் கோட்டில் நின்று கொண்டிருந்தார்கள். ராஜாவின் முகத்திலிருந்த வேர்வைத்துளிகள் பூமியை நனைத்துக்கொண்டிருந்தது.

"இங்க எல்லோரும் கவனிங்க பா இது தான் விதிமுறை அங்க தெரியிற அந்த போஸ்ட் கம்பிய தொட்டு இங்க திரும்பவும் வரணும். யாரையும் இடிச்சினு ஓட கூடாது. அப்படி மீறி ஜெயிச்சா கூட அது செல்லாது. அடுத்த ரேசுக்கு சேத்துக்க மாட்டோம்." என்று நடுவர் (6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்) விதிமுறைகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

(ராஜாவுக்கு 51/2 வயதும் அவனுடைய அண்ணனுக்கு 7 வயதும் ஆகிறது. வீதியில் நண்பர்களுக்கிடையே அடிக்கடி இந்த மாதிரி ரேஸ் நடக்கும். அதில் ராஜுக்கும் அவன் அண்ணனுக்கும் தான் மிகப்பெரிய போட்டியாக இருக்கும். அதில் பெரும்பாலும் ராஜாவின் அண்ணன் தான் ஜெயிப்பான். எவ்வளவு போராடியும் மற்றவர்களை ஜெயிக்க முடிஞ்ச அவனால் அவனுடைய அண்ணனை மட்டும் ஜெயிக்க முடியவில்லை இரண்டாம் இடம் தான் வர முடிகிறது. )

அவர்கள் விளையாடுவதை ராஜாவின் அம்மா பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்.

ஒன்னே,ரெண்டே என்று என நடுவர் கணக்கை தொடங்கினார்.

மூன்று (3) என கேட்டதும் அனைவரும் வேகமாய் ஓடினார்கள். ராஜா அவனால எவ்வளவு வேகமாக ஒட முடியுமோ அவ்வளவு வேகமாஓடிக்கொண்டிருந்தான்.

அவன் எவ்வளவு வேகமா ஓடியும் வழக்கம் போல ரேஸ்ல தோத்து போய்ட்டான்.

பக்கத்திலையே அவங்க அம்மா இருந்ததால் இன்னும் அவமானமாய் இருந்தது. அதனால் ஓ-வெனு அழ ஆரம்பிச்சிட்டான்.

"அம்மா அண்ணன் தோக்கவே மாற்றான் மா எப்ப பாரு அவனே ஜெயிச்சினே இருக்கான் மா" என்று அண்ணனை கை காட்டி திட்டிக்கொண்டே முறையிட்டு அழுது கொண்டிருந்தான்.

அம்மா ராஜாவை சமாதானப்படுத்தி "டேய் தம்பிக்காக ஒரு முறை தோக்க வேண்டியது தானே" என்று அம்மா தன் பெரிய மகனிடம் கடிந்து கொண்டாள்.

"நான் தோத்தா அவன் ஓவரா பண்ணுவான் மா" என்று ராஜாவின் அண்ணன் பதில் சொன்னான்.

 "அதுலாம் ஒன்னும் பண்ண மாட்டான். நீ ஒரே ஒரு முறை தோத்து போ" என்று அம்மா கேட்டுக்கொண்டாள்.

"சரி" என்று அம்மாவிடம் ராஜாவின் அண்ணன் சொல்லிவிட்டு ரேசுக்கு சென்றான்.

மறுபடியும் ரேஸ் ஆரம்பமாகியது.

ஒன்று இரண்டு மூன்று என நடுவர் கணக்கு தொடங்கி முடிந்ததும் வேக வேகமாய் இருவரும் ஓட தொடங்கினார்கள். இந்த முறை அவன் அண்ணன் விட்டுக்கொடுக்க இராஜா ஜெயித்து விட்டான்.

அவ்வளவு தான் ராஜா தன் கொண்டாட்டத்தை தொடங்கினான்.
"ஊ ஊ" வென்று கத்திக்கொண்டு அவனுடைய அண்ணனை வெறுப்பேற்ற தொடங்கினான்.

" நான் யாருனு தெரியும்ல .. என்னலாம் ஜெயிக்க முடியுமா? என் கிட்ட மோதி உன்னால இனி ஜெயிக்க முடியாது டா. " என்று சொல்லிக்கொண்டே தன் தொடையில் தட்டி அவன் வீராவேசத்தை காட்டினான்.

"என் கிட்டலாம் இனிமேல் வெச்சிக்காத ... கலம்பு கலம்பு இந்த இடத்த விட்டு கலம்பு" என்று அவன் அண்ணனை மிரட்டி விட்டு தன் நண்பர்களுடன் கொண்டாட்டத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

இப்போ ராஜாவின் அண்ணனுடைய முறை.

' ஓ-வென்று கத்தி அழுது கொண்டே அம்மா கிட்ட போய் "இதுக்கு தான் நான் தோக்க மாட்டணு சொன்னேன் பார்த்தாள எப்படி பண்றான்னு" என்று சொல்லிக்கொண்டே அம்மாவை போட்டு அடித்து கொண்டிருந்தான்.

"விடுடா விடுடா செல்லம்  தம்பி தானே. அங்க பாரு அவன் எவ்வளவு சந்தோசமா இருக்கான்"என்று தனது  மூத்த மகனை மார்போடு அணைத்து அவன் முகத்தை திருப்பி காண்பித்தாள். தம்பியின் சந்தோசத்தை பார்த்ததும் ராஜாவின் அண்ணன் மனம் லேசாய் சமாதானத்துக்கு திரும்பியது.


No comments: