Tuesday, 19 January 2016

சேட்டின் நாணயம் (சிறுகதை)


"என்னங்க. இந்தாங்க இந்த காச எடுத்துட்டு போய் அந்த சேட்டு கிட்ட வச்ச 2 1/2 சவரன் நகையை மீட்டுக்கொண்டு வாங்க" என்று கணவன் மதனுக்கு கட்டளையை பிறப்பித்தாள் பத்மா..

"இப்போ நகைய மீட்டுறதுக்கு என்ன அவசரம் பத்மா. இன்னும் நாள் இருக்கே. நமக்கு வந்த லாபத்த வேற எதுக்குனா உபயோகப்படுத்திகலாம்ல" என்று மதன் சொன்னான்.

"என்னங்க சொல்லுறீங்க. 3 நாள் பெஞ்ச மழையில சென்னைல எல்லாம் கடையையும் இழுத்து மூடிட்டாங்க. 2 நாளைக்கு அப்புறம் இன்னைக்கு தான் எல்லாம் கடையை மறுபடியும் திறந்துனு இருக்காங்க. அதுல வேற மறுபடியும் மழை பெய்யும்னு செய்தில போடுறாங்க."

"அதுக்கு" என்று மதன் இடைமறித்தான்.

"அந்த சேட்டு வெள்ளம் அதிகமாகுதுன்னு நகையை தூக்கிகிட்டு அவன் சொந்த ஊருக்கு ஓடிட்டனா என்ன பண்றது. அதான் போய் வாங்கிட்டு வர சொல்றேன். " என்று பத்மா விளக்கினாள்.

"நீ சொல்றதும் சரிதான்." என்று பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு பைக் எடுத்துக் கொண்டு களம்பி அடகு கடையை அடைந்தான்..

மதன் வீட்டுக்கும் அடகு கடைக்குமான தொலைவு குறைந்தது 5 கி.மீ இருக்கும்.

நல்ல வேலை கடை திறந்து இருந்தது.

"வணக்கம் சேட்டே. என்ன சேட்டே இங்குலாம் மழை தண்ணி தேங்கலையா" என்றான் மதன் .

"வணக்கம் பா. இங்க முட்டி வர தண்ணி நின்னுது பா. இரண்டு நாள் கழிச்சி இப்பதான் கடையை திறக்குறேனா பார்த்துக்கோ." என்றார் சேட்டு.

ஓ அவ்வளவு தண்ணீர் நின்னுச்சா. சரி சரி இந்த ரசீதுல இருக்குற நகைய மூட்டனும் என்று சொல்லி ரசீதை நீட்டினான் மதன்.

"ரசீதை வாங்கி பார்த்துவிட்டு. நீ காச கட்டிவிட்டு  நாளைக்கு காலைல 8 மணிக்கு வந்து நகையை வாங்கிக்கோ பா"  என்றார் சேட்டு,

"அது எப்படி சேட்டே நகை வாங்காம காசு கொடுக்க முடியும். நீ வழக்கமாய் உடனே கொடுத்துடுவியே. இப்ப என்ன ஆச்சு" என்று கேட்டான் மதன்.

"அது ஒன்னும் இல்ல பா. மழை தண்ணி வேற அதிகமாய் வந்துச்சி. அந்த தண்ணிலாம் கடைக்குள்ள போய்டிச்சினா நகை எல்லாம் வீணாய்டும். அது பத்ரமாய் இருக்கட்டும் என்று என் வீட்டுக்கு எடுத்துட்டு போய் வச்சிக்கிட்டேன். என் வீடு இரண்டாவது மாடி என்பதால் தண்ணி வேற உள்ள வராது." என்றார் சேட்டு .

எப்படி காசை கட்டிவிட்டு போவது என்று ஒரு நிமிடம் யோசித்தான். அப்பொழுது தான் அவனுக்க ஞாபகம் வந்தது. எந்த அரசியல் வாதிகளும் உதவி செய்யாத வட சென்னையில் மார்வாடிகளும் ஜெயின்களும் கொட்டும் மழையில் 3 நாளும் உணவை அவர்களே தயார் செய்து அணைத்து மக்களிடமும் கொண்டு போய் சேர்த்ததை பற்றி தன் நண்பன் ரமேஷ் அவர்களை பற்றி பெருமையாய் சொன்னது.

அந்த நினைப்பு வந்ததும் வேறு எதுவும் யோசிக்காமல் உடனே சரி என்று ஒப்புக்கொண்டு பணத்தை சேட்டிடம் கட்டி விட்டு ரசீது கூட வாங்காமல் வீட்டுக்கு புறப்பட்டான்.

பாதி வழியில் மனைவியிடம் இருந்து போன் வந்தது.

"என்னங்க. நகையை வாங்கிட்டீங்களா" என்று கேட்டாள் பத்மா.

அங்கு நடந்ததை மனைவியிடம் விளக்கினான்.

உடனே மனைவி "நீ என்ன முட்டளாயா... உனக்கு அறிவில்ல. ஏற்கனவே ரெண்டு நாள் கழிச்சி இப்பதான் கடை தொறந்ததா அவனே சொல்லி இருக்கான். இன்னைக்கு இரவு மழை வந்தா மறுபடியும் எப்படி கடைய அவன் திறப்பான்.  "  என்று மனைவி பத்மா கணவனை வசை பாடிக்கொண்டிருந்தாள்.

மனைவி சொல்வது உண்மை போல் இருந்ததால் "இப்போ என்ன பண்ணலாம்." என்று மனைவியிடமே கேட்டான்.

"மரியாதையாய் போய் நகை இல்ல பணத்த வாங்கிட்டு வா. " என்று கண்டிப்போடு சொன்னாள்.

சரி என்று ஒப்புக்கொண்டு தன் பைக்கை திருப்பிக்கொண்டு அடகு கடைக்கு விரைந்தான். அவனுடைய துரதிர்ஷ்டம் கடை பூட்டப்பட்டிருந்தது.

அவனக்கு பயமும் பதற்றமும்தொற்றிக்கொண்டது. "அடப்பாவி 10நிமிட முன்னாடி தானே காச கொடுத்தேன் அதுக்குல்லவா மூடிடுவான். ஒருவேளை காசை தூக்கிட்டு ஓடிட்டானோ." என்று மனதுக்குள் பிதற்றிக்கொண்டிருந்தான்.

நகைய சேட்டு திருப்பி கொடுப்பானா  என்ற பயம் போய் மனைவிய எப்படி சமாளிக்கறது என்று யோசித்தான். ஒரு யோசனையும் கிடைக்கவில்லை.

வீட்டினுள் பயத்தோடு நுழைந்தான்.

மனைவி என்ன ஆச்சு என்று கேட்டாள். இவன் நடந்ததை சொன்னான்.
அவ்வளவு தான் கெட்ட கெட்ட வார்த்தைகளால் மதனுக்கு அர்ச்சனை துவங்கியது அது இரவு 10 மணி வரை நீடித்தது.


திட்டிக்கொண்டே பத்மா தூங்கிவிட்டாள். ஆனால் மதனுக்கு பயம் அதிகமாய் இருந்ததால் தூக்கம் வரவில்லை அதற்கு காரணம் மழை மேகம் வானத்தை வேற சூழ்ந்து கொண்டிருந்தது.

மழை வர கூடாது என்று கடவுளை மதன் வேண்டிக்கொண்டிருக்க ஆரம்பித்தான். ஆனால் அவன் வேண்டுதலுக்கு நேர்மாறாய் நடந்தது.

கன மழை சென்னையை துவம்சம் செய்ய ஆரம்பித்தது. இரவு முழுவதும் அது நீடித்துக் கொண்டே இருந்தது. காலை 3.30மணிக்கு தான் அவனுடைய கண்கள் தானாய் தூங்க ஆரம்பித்தது.

அவன் கழித்து பார்க்கும்போது மணி காலை 7.45. அடப்பாவி சேட்டு 8 மணிக்கு வர சொன்னாேன என்று சட்டையை வேகவேகமாய் மாட்டிக்கொண்டு பைக்கை எடுத்துக்கொண்டு  கலம்பினான்.

வழியெல்லாம் வெள்ளம் அதிகமாய் இருந்ததால் வண்டி மெதுவாய் நீதிக்கொண்டு சென்றது.

இன்னும் 100 மீட்டரில் தான் கடை உள்ளது. ஆனால் மழை தண்ணி அதிகமாய் உள்ளதால்  இதற்கு மேல் அவனுடைய வண்டி செல்ல முடியாது.



அதனால் இறங்கி நடக்க ஆரம்பித்தான். அவன் நடக்க நடக்க மழை தண்ணி அதிகமாய் ஏற ஆரம்பித்தது.


காலில் ஆரம்பித்து, முட்டி, தொடை என்று ஒவ்வொரு 10 மீட்டருக்கும் தண்ணி ஏறியது.

எப்படியும் சேட்டு கடையை திறந்து இருக்க மாட்டான் என்று முடிவு செய்து பயத்தோடும் பதற்றத்தோடும் கடையை நெருங்கினான்...

அப்பொழுது மணி காலை 8.30ஆக இருந்தது.

அவன் கடையை நெருங்க தேங்கிய தண்ணீர் இடுப்புக்கும் மேல் இருந்தது.

இவனுடைய யூகிப்பு சரியாய் இருந்தது சேட்டு கடை அடைக்கப்பட்டிருந்தது. மழை தண்ணீர் கடை உள்ளே போய் வெளியில் வருவதாய் இருந்தது .

"அவ்வளவு தான் நாம தொலைந்தோம். மனைவி சரியாய் கணித்தாள். அப்பவே அவள் பேச்சை கேட்டிருக்கணும். இல்ல காசு கொடுக்கறதுக்கு முன்னாடி போன் பண்ணி கேட்டு கொடுத்திருக்கணும். இப்படி சொந்தமா முடிவெடுத்து எமாந்துட்டமோ. இன்னைக்கு என்னலாம் பண்ண போறாளோ" என்று மனதுக்குள் புலம்பி தள்ளிக்கொண்டிருந்தான்.

கடையிலிருந்து கொஞ்சம் தள்ளி ஒருவர் இடுப்புக்கு மேல் உள்ள தேங்கிய தண்ணீரில் குடை பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.


அவர் யார் என்று கிட்ட நெருங்கி மதன் பார்க்க இவனுக்கு பேரதிர்ச்சி அது சேட்டுவே  தான் இடுப்பளவு தண்ணீரில் மழையினில் குடை பிடித்து நின்று கொண்டிருந்தார்.

அவர் மதனை பார்த்ததும் "என்ன பா 8 மணிக்கு வர சொன்னா இவ்வளவு லேட்டா வர. சரி இந்தா உன் நகை புடி" என்று நகையை மதன் கையில் கொடுத்தார்.

"நகையெல்லாம் சரியாய் இருக்கணு பார்த்துக்கோ பா" என்றார் சேட்டு.

மதன் சரியாய் இருப்பது போல் தலையாட்டினான்.

"நல்லது" என்று சொல்லிவிட்டு சேட்டு தன் வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தார்.

மதன் விழியில் லேசாய் கண்ணீர்த்துளிகள் எட்டிப்பார்க்க அவர் போன பாதையை பார்த்து பெரியதாய் கை எடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தான்.


No comments: