Monday, 1 February 2016

அறிவும் ஆங்கிலமும் (சிறுகதை)

"ஹே மச்சி அதோ வரான் பாருடா விவேகன் என்ன சூப்பரா செமினார் எடுத்தான் ல. இவன் கிட்ட தான் நான் இங்கிலீஷ் டியூஷன் எடுத்துக்க போறேன்பா வேற யாருலாம் என் கூட சேர போறீங்க?" என்று சிரித்துக்கொண்டே மிக நக்கலாய் விவேகனின் காது பட ராகேஷ் கேட்டான்...

அவன் கேட்டதற்கு கூட இருக்கும் அனைவரும் கை தூக்கி விவேகனை கிண்டல் செய்தார்கள்.

அந்த நக்கல் பேச்சைக் கேட்டும் விவேகன் கோபப்படாமல் லேசான புன்னகை மட்டும் புரிந்து அவர்களை கடந்து சென்றான்.



அதற்கு காரணம் தமிழ் வழியாய் படித்த விவேகனுக்கு ஆங்கிலத்தில் செமினார் எடுக்க வேண்டிய கட்டாயம் வந்தது. செமினார் முழுவதும் ஆங்கிலம் தெரியாத விவேகனின் பேச்சை வகுப்பே கிண்டலடித்தும் அதை பற்றி விவேகன் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல்  1 மணி நேரம் முழுவதுமாய் அந்த செமினாரை எடுத்து முடித்தான். செமினார் எடுத்து முடித்ததும் அவனுடைய ஆசிரியர் விவேகனை வெகுவாக பாராட்டினார். அது மற்ற மாணவர்களுக்கு லேசாய் எரிச்சலை கிளப்பியது.

 பொறியியல் படிப்பில் 4 வருடம் முடியும் தருவாயிலும் அவனால் சரளமாய் ஆங்கிலத்தில் உரையாடாமல் போனது.

இறுதி ஆண்டு நெருங்கியதால் விவேகன் உட்பட அனைவரும் ப்ரொஜெக்டை முடித்து  கல்லூரி மேலாளருக்கு அனுப்பினார்கள்.. 

அதில் சில சிறந்த ப்ராஜக்டை கல்லுரி முதல்வர் தேர்ந்தெடுத்து அதை பெரிய பெரிய கம்பனிக்கு அனுப்பி வைத்தார். அதில் விவேகனுடைய ப்ராஜெக்ட் பெரிய அளவில் பேசும்படி இருந்தது. பல கம்பனிகள் அந்த ப்ரொஜெக்டை வாங்க போட்டி போட்டுக்கொண்டு அந்த கல்லூரிக்கு விரைந்தது. அதில் விவேகன் வகுப்பு மாணவர்கள் நினைக்கும் சில கனவு கம்பெனிகளும் அடங்கும்.

விவேகன் கூட படிக்கும் மாணவர்களுக்கு ஒரே ஆச்சரியம். "அறிவில்லாத இவன் எப்படி இந்த அளவு யோசிச்சிருப்பான் என்று".

அவர்களால் அந்த ஆர்வத்தை அடக்க முடியாமல் விவேகனை கும்பலாய் சூழ்ந்து கொண்டு  "ஹே மச்சி.. எப்படி டா இத பண்ண. எப்படி இந்த ப்ரொஜெக்டா யோசிச்ச. உனக்கு வேற யார்னா உதவி செஞ்சாங்களா." என்று  கேள்விகளை  அடுக்கினார்கள்.

"ஆங்கிலம் தெரியலனா அறிவு இவ்லாதவனு அர்த்தம் இல்லை டா. தமிழ தவிர வேற மொழியில ஆர்வம் இல்லாதவனு  அர்த்தம் டா" என்று அவர்களிடம் சொல்லிவிட்டு படத்தில் வரும் ஹீரோ போல அதே மெல்லிய உதிர்த்து நடந்து சென்றான்...

No comments: