Thursday, 11 February 2016

பேச ஆட்கள் தேவை (சிறுகதை)


"டேய் பாலாஜி. பிறந்த நாள் வாழ்த்துக்கள் டா" என்று வாழ்த்துக்களையே அதட்டலாக பாலாஜியிடம் தெரிவித்தார் அப்பா..

"இந்தா காசு. இத செலவுக்கு வச்சிக்கோ. போகும்போது போற வழியில இருக்குற நம்ம தாத்தாவுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு அப்புறம் ஊர் சுத்த போ" என்றார் அப்பா.

"காசையும் ஆசிர்வாதத்தையும் ஒரு சேர வாங்கி கொண்டு" அப்பாவிடமிருந்து விடை பெற்றான் பாலாஜி.

ஹோட்டலில் தாத்தாவுக்கு சாப்பாடை வாங்கிக்கொண்டு அவரோட வீட்டுக்கு விரைந்தான்.

வீட்டுக்குள் நுழைந்து தாத்தாவை தேடினான். அவர் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தார்.

அவர் அருகில் சென்று "இந்தாங்க தாத்தா சாப்பாடு" என்றான் பாலாஜி.

சாப்பாட்டை வாங்கி கொண்டு அவன் முகத்தையே உற்று நோக்கிக்கொண்டிருந்தார்.

"என்ன தாத்தா உங்களுக்கு வேற எதனா வேணுமா" என்று  கேட்டான் .

"ஆமாம்" என்று லேசாய் தலையாட்டினார் .

"என்ன வேணும்னு சொல்லுங்க வாங்கி தந்துட்டு போறேன்" என்று வேண்டா வெறுப்பாய் கேட்டான் பாலாஜி.

"நீ என்கிட்டே ஒரு 10 நிமிஷம் பேசுறியா" என்று மெல்லிய குரலில் கேட்டார்.

அதை கேட்டதும் பாலாஜியின் மனது அதிர்ந்தது.

"என்ன சொல்ல வரீங்க" என்று தெளிவு படுத்த மறுபடியும் கேட்டான்.

"இல்ல என்கிட்டே ஒரு 10 நிமிஷம் பேசுறியானு கேட்டேன்" என்றார் தாத்தா.

ஏன் இப்படி சொல்றார்னு அவனுக்கு புரியாமல்
"சரி" என்று தலையாட்டி விட்டு அவரிடம் இருந்து சிறிது தூரம் தள்ளி பேச அமர்ந்தான்.

பாலாஜியும் அவன் தாத்தாவும் பல விசயங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பாட்டி இறந்ததை பற்றி அவனிடம் பேசும்போது சோகத்தில் தாத்தா அழ ஆரம்பித்து விட்டார்.

"என்னடா இது வம்பா போய்டிச்சே" என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டு
"உங்களுக்கு என்ன நடிகர புடிக்கும்" என்று பேச்சை மாற்றினான் பாலாஜி.

கண்ணை துடைத்துக்கொண்டே "எனக்கு எப்பவுமே M.G.R தான் பா. அவரோட ஸ்டைலான நடிப்பும் அசத்தலான நடை உடை பாவனை எல்லாத்திலும் அவர் தான் பா டாப்பு. அவர நாங்கலாம் நடிகரா பார்த்ததில்ல கடவுளா தான் பார்த்திருக்கோம்" என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

M.G.R பற்றி புகழ்ந்து கொண்டு இருக்கும் போது தாத்தாவின் கண்ணிலிருந்து கண்ணீரும் (ஆனந்த கண்ணீர்) உதட்டிலிருந்து மகிழ்ச்சியின் சிரிப்பும் ஒரு சேர வெளிவந்து கொண்டே இருந்தது.

சிறிது நேரம் கழித்து தான் நேரத்தை பார்த்தான். அதற்குள் அரை மணி நேரம் ஓடிப்போயாச்சி என்று பதறி "சரி தாத்தா" நான் கலம்புறேன்னு சொல்லிவிட்டு எழுந்து நின்றான்.

"என் கூட உட்கார்ந்து பேசியதற்கு ரொம்ப நன்றி பா " என்று இரு கரங்களை கை கூப்பி அவனுக்கு நன்றி தெரிவித்தார்.

தாத்தா  கை கூப்பி வணங்கியதும் அவனுக்கு மிகவும் சங்கடமாய் போனது. அதலாம் ஒன்னும் இல்ல என்பது போல தலையாட்டினான் பாலாஜி.

"இல்ல பா. அடுத்தவங்க கூட இவ்வளவு சந்தோசமாய் பேசி எத்தனை மாசம் ஆச்சின்னு எனக்கே ஞாபகம் இல்ல பா." என்று நா தழுதழுக்க சொன்னார் தாத்தா .

அவனால் அதற்க்கு மேல் பேச முடியவில்லை.தாத்தாவிடம் சைகையாலே கலம்புறேனு சொல்லிவிட்டு அங்கிருந்து விடை பெற்றான்.

வண்டியில் போகும்போது தாத்தாவின் பேச்சு அவனுக்கு ஞாபகத்துக்கு வந்து வந்து போனது. அப்போது தான் அவனுக்கு புரிந்தது முதியவர்கள் பேச ஆளில்லாமல் தவிக்கிறார்கள் என்று.

அப்பொழுதிலிருந்து பாலாஜி அடிக்கடி தாத்தா வீட்டுக்கு போய் பேச ஆரம்பித்தான். தாத்தாவும் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தார். படுத்த படுக்கையாய் இருந்தவர் சந்தோசத்தில் வெளியே வந்து நடமாட கூட ஆரம்பித்து விட்டார்..

No comments: