Friday, 6 May 2016

பொம்மை (குறுங்கதை)

தன் மகள் நிலாவை கூட்டிக்கொண்டு பொம்மைகள் விற்கும் கடைக்கு சென்றார் அப்பா. கடை வாசலில் அழுக்கான உடை அணிந்து ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தாள்.



அந்த சிறுமி "சார்" என்று சொல்லி கை நீட்ட அவளுக்கு அப்பா 2 ரூபாய் போட்டு பெருமையாய் கடைக்குள் சென்றார்.

உள்ளே சென்றதும் நிலா எல்லா பொம்மையையும் சுற்றி பார்த்துவிட்டு அந்த பொம்மை வேணும் என்று கை நீட்டினாள். அந்த பொம்மை கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருந்தது. இருந்தாலும் அப்பா அதை தன் மகளுக்காக வாங்கி கொடுக்க முற்பட்ட போது எனக்கு இரண்டு பொம்மை வேணும் என்று சொன்னாள் நிலா.

"ஏன்" என்று கேட்க பதில் சொல்லாமல் வேணும் என்று சொல்லி அடம்பிடித்தாள். அவளை சமாதானப் படுத்த முயன்று தோற்று கோபத்தோடும் எரிச்சலோடும் இரண்டும் வாங்கி கொடுத்தார்.

அந்த இரண்டு பொம்மைகளையும் வாங்கி கொண்டு வெளியே ஓடினாள் நிலா. "ஏய் எங்க ஓடுற?" என்று அப்பா கத்தியதை காதில் கொஞ்சம் கூட வாங்காமல் வெளியே ஓடி வந்தாள். அப்பா அவளை பின் தொடர்ந்து ஓடி வந்தார்.

அங்கே நின்ற சிறுமி முன்னாடி போய் நின்று கையில் இருந்த இரு பொம்மையில் ஒரு பொம்மையை நீட்டி "இந்தா வாங்கிக்க. இந்த பொம்மை உனக்கு இந்த பொம்மை எனக்கு" என்று சொன்னாள் மகள்.

"இந்த பொம்மை எனக்கா" என்று ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் கேட்டாள்.
"ஆமா" என்று சொன்னாள் நிலா.

பொம்மையை வாங்கிகொண்டு முகத்தில் மகிழ்ச்சி பொங்க அவளுடைய அம்மாவை நோக்கி ஓடினாள் சிறுமி.

இதை பார்த்துக்கொண்டிருந்த அப்பா தன்னை நினைத்து வெட்கப்பட்டார். அதே நேரத்தில் தன் மகளை தட்டிக்கொடுத்து பாராட்டி அவளை நினைத்து பெருமைப்பட்டார்.

நீதி: பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொருவரின் மனதளவுக்கு தான் அடுத்தவர்களுக்கு உதவ முடியும்.

2 comments:

Anonymous said...

true bro

Remo said...

Wow...